Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Sunday, July 24, 2016

கபாலி (2016) - முழுமையான் படம்


25 வருடம் சிறைவாசம் முடித்து வரும் ஒரு கேங்க்ஸ்டர் தான் வாழ்வில் இழந்ததை திரும்பபெறும் போராட்டம்தான் கபாலி. இந்த நேரம் கபாலி படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதனால் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் இங்கு தொகுத்து உள்ளேன். படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 


Spoilers ahead:

"கபாலியில் நான் ரசித்த காட்சிகள்":


1) "மாய நதி" பாடலில், ஒரு வெளிநாட்டு ஜோடி பிரெஞ்சு கிஸ் அடித்து கொண்டுயிருக்கும் போது கபாலி, குமுதவல்லியை கண்ணில் காதல் ததும்ப பார்க்கும் காட்சி. ராதிகா ஆப்தே அதற்கு குடுக்கும் ரியாக்ஷன். மக்கள் தனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் சும்மா குடுக்கவில்லை என்பதை ரஜினி நிருபித்த காட்சி.

2) தாய்லாந்து நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, யோகி தான் தன் மகள் என்று புரிந்து கொண்டு, தன் மகள் யோகி தனது கையை பிடித்து வெளியே கூட்டி கொண்டு வரும் போது யோகியை பார்க்கும் பார்வை. செம. அந்த காட்சியில் ரஜினி வாழ்ந்திருப்பார்.

3) நல்ல ராவான கொரியன்/அமெரிக்கன்  கேங்க்ஸ்டர் படங்களை பார்க்கும் போது, எங்கே யாருக்கு எப்போது வெட்டு விழும் என்கிற ஒருவித பயம் நமக்கு வரும் பாருங்கள், அதே போன்ற பய அனுபவம் ரஜினி படத்தில் 3~ 4 காட்சிகளில் கிட்டியது மறக்க முடியா அனுபவம்.

4) பெட் ஷாப்பில் நடக்கும் சண்டைக்கு முன்பான பில்ட் அப் காட்சி.

5) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் தன் மகள் பிடிபட்ட பிறகு, அந்த இடத்தில ரஜினி சோபா மீது கால் மீது கால் போட்டு உட்காரும் காட்சி, எப்படி ஒருவன் தன் மகள் துப்பாக்கி முனையில் இருக்கும் போது கூட இப்படி திமிராக இருக்கிறானே என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு ரஜினி பேசும் வசங்கள் "கபாலியை" எனக்கு முழுமையாக உணர்த்தியை காட்சிகள். 

6) பண்ணை வீட்டில் குண்டடிபட்டு சோர்வாய் இருக்கும் போது, தன் மகள் முலம் தன் மனைவி எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்று அறிந்த பிறகு, சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழும் காட்சி செம. அந்த காட்சியை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாய் படம்மாக்கிய ரஞ்சித்க்கு ராயல் சல்யூட். நாயகன் படத்தில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை கமல் காட்டு எருமை பொறியில் மாட்டியது போல் அழுவார். அந்த காட்சியமைப்பை இன்று வரை பேச படுகிறது. சராசரி மனிதன் அது போல் செய்யமாட்டான். அது போக குண்டடிபட்டு ஓய்வில் இருக்கும் ஒருவன் அப்படி தான் அழுவான்.

7) செட்டியார் வீட்டில், சங்கிலி முருகன் அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்து "வள்ளியை" பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லி போன் அடிப்பார், அந்த பக்கம் ரிங் போய் கொண்டே இருக்கும். அவர்கள் போன் எடுக்கும் வரை ரஜினி முகத்தில் தெரியும் பதட்டம். யப்பா அந்த பதட்டம் எனக்கும் ஒட்டி கொண்டது. 

8) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள், டயலாக் டெலிவரி செம.

9) பிளாஷ்பேக்கில் ரஜினியின் எனெர்ஜி. சும்மா தீ மாதிரி நடித்து இருப்பார். நாசர் பேசும் வசனங்கள் எல்லாமே சிம்பிள் மற்றும் பவர்புல்.

10) பள்ளி பட்டமளிப்பு விழாவில் ரஜினி தன் கதையை மாணவர்களுக்கு சொல்லும் காட்சிகள், மெது மெதுவாய் நமது டெம்போவை ஏற்றி, கதை சொல்லி முடிக்கும்போது அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் எமொஷனை நமக்குள் புகுத்தி இருப்பார். அந்த காட்சி முடியும் போது என் நெஞ்சு கனத்து போனது. இது போன்ற அனுபவம் வேறு எந்த காட்சிக்கும் எனக்கு கிட்டியது இல்லை. இந்த ஒரு காட்சிக்கும் மட்டும் கபாலியை நான் கொண்டாடி மகிழ்வேன்.





படத்தில் நான் குறைகள் என்று கருதுவது: 

1) கடைசி கடைசி காட்சி, "டைகர்" ரஜினியை சுடும் காட்சி. அதை ரஞ்சித் தவிர்த்து இருக்கலாம். 

2) படத்தில் வரும் நிறைய கதாபாத்திரத்தின் பெயர் குழப்பங்கள். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் "யோகி" "ஜீவா" யார் என்றே புரிந்தது. 

3) யூகிக்க கூடிய காட்சியமைப்பை தான் படத்தின் மிக பெரிய பலவீனம். 

4) மலேசியா சொல்லாடல்கள் புரிந்துகொள்ள சற்று கடினமாய் இருந்தது. தேத்தண்ணி, கோழிக்கறி, சாவடி, பொன்னழகு போன்ற சொற்கள்.

5) டோனி லீயின் சாம்ராஜியத்தை ரஜினி கீழே கொண்டு வரும் காட்சிகள் சப்பையாய் முடிந்தது பெரிய ஏமாற்றம். 

கபாலி இத்தனை கோடி வசூல் செய்தது, அந்த சாதனையை முறியடித்து போன்ற விசயங்களை பற்றி நல்ல சினிமாவை நேசிப்பவன் கவலை பட மாட்டான். நல்ல சினிமாவை விரும்பியவர்களுக்கு நல்ல விருந்தை ரஞ்சித்தும் ரஜினியும் வழங்கி உள்ளார்கள். பிடித்தவர்கள் எடுத்து கொள்ளலாம், பிடிக்காதவர்கள் "2.0" க்கு காத்து இருக்கலாம்.

கபாலி  - முழுமையான் படம்

My Rating : 9.0



Wednesday, February 04, 2015

என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்

 தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால்.  அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.


 சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.



அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார்.

அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.



திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.

கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.



கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது.

என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்

My Rating : 8.5


Wednesday, November 05, 2014

The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்

விஞ்ஞானம் என்பதும், தொழில்நுட்பம் என்பது வேறு. விஞ்ஞானத்தையும் டெக்னால‌ஜி எனப்படும் தொழல்நுட்பத்தையும் பல நேரங்களில் நாம் குழப்பிக் கொள்வதுண்டு. விஞ்ஞானம் மனிதகுலத்துக்கு அவசியமானது. டெக்னால‌ஜி பொரும்பாலும் நம்மை நுகர்வுப் பொருளாக்குவதற்கு பயன்படுத்தப்படுவது. மனிதன் படிப்படியாக டெக்னால‌ஜியின் அடிமையாகி வருகிறான். இந்த அபாயத்துக்கு எதிராக இந்தியாவில் அழுத்தமாக குரல் கொடுத்தவர் காந்தி.

தாராளமயமாக்கலின் நுகர்வு உலகு இந்த உலகின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறது. அதாவது standardization செய்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் வாங்கும் ஒரு அங்குல நட்டும் போல்டும் (சில நாடுகள் தவிர்த்து) உலகம் முழுக்க ஒரே மாதி‌ரியாகதான் இருக்கும் அதனால் எங்கும் அதனை பொருத்த முடியும். பத்தாம் எண் காலணியின் அளவு உலகம் முழுக்க ஒன்றுதான். இப்படி standardization செய்யும் போது அதனை சந்தைப்படுத்துதல் எளிது. அமெரி்க்காவில் தயா‌ரிக்கிற ஒரு பொருளை தென்தமிழகத்தில் ஒரு குக்கிராமம்வரை கொண்டு வந்துவிட முடியும், விற்பனை செய்ய இயலும். 

நெல் அ‌ரிசி சோறு சாப்பிடுகிறவர்களை பீட்சா சாப்பிடுகிறவர்களாக மாற்றினால் இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ தமிழர்களுக்கான உணவுகளை தயா‌ரிக்க முடியும், தமிழகத்தில் சந்தைப்படுத்த இயலும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த standardization ஐ திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. அவர்களின் பர்கரையும், பீட்சாவையும், கென்டகி சிக்கனையும் - அவைதான் உயர்ந்தது, நாக‌ரிகமானது என்ற மோஸ்தரை உருவாக்குவதன் மூலம் நம்மிடையே சந்தைப்படுத்துகின்றன.


தி வோல்ட்ஸ் என்ட் திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுகிறது. இந்த இடத்தில் கலை என்றால் என்ன என்பது குறித்தும் பார்க்க வேண்டும். வாழ்வின் சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துவது கலையின் ஆதாரமான விஷயம். அது நுகர்வு கலாச்சாரத்தின் ஒழுங்கமைவுக்கு எதிரானது. ஏன் தினம் ஒரே மாதி‌ரியான வேலைகளை செய்ய வேண்டும்? ஒரே மாதி‌ரியான உடைகளை போட வேண்டும்? ஒரே மாதி‌ரியான பழக்க வழக்கங்களை மட்டும் கொண்டாட வேண்டும் என்று கேளிவிகளை எழுப்பக் கூடியது. தாரளமயமாக்கல் அனைத்தைம் சேர்த்துக் கட்டினால் கலை அதனை பி‌ரித்துப் போடுகிறது. தொழில்நுட்ப நெட்வொர்க் அனைத்தையும் standardization செய்கிறது. கலை ஒவ்வொன்றின் தனித்துவத்தை நிலைநிறுத்துகிறது.

தி வேர்ல்ட்ஸ் என்ட் திரைப்படத்தில் இருபது வருடங்களுக்குப் பிறகு சில நண்பர்கள் தங்களின் சொந்த நகரத்தில் ஒன்றிணைகிறார்கள். படிக்கிற காலத்தில் அவர்கள் மேற்கொண்ட pub crawl தோல்வியில் முடிந்திருக்கும். pub crawl என்றால் நகரத்தில் இருக்கும் அடுத்தடுத்த பஃப்களில் தொடர்ச்சியாக ஒரே இரவில் மது அருந்துவது. நண்பர்களின் கணக்கு 12 பஃப்கள். 12 வது வேர்ல்ட்ஸ் என்ட் எனப்படும் பஃப். ஆனால் அவர்களால் அந்த சுற்றை முடிக்க முடியாமல் போய்விடும். அதனை பூர்த்தி செய்யவே இந்த சந்திப்பு.


இந்த தொடர் குடியில் இந்த சந்திப்பை ஒழுங்கு செய்யும் கேரி கிங் நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் ரோபோக்கள் என்பதை கண்டு பிடிக்கிறான். மற்ற நண்பர்களும் அதனை அறிந்து கொள்கிறார்கள்.

அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபோக்களுடன் சண்டையிட்டு கேரி கிங்கும் நண்பர்களில் ஒருவரான ஆன்டியும் கடைசி பஃப்பான தி வேர்ல்ட்ஸ் என்ட்வரை வந்து விடுகிறார்கள். அங்குதான் இந்த குளறுபடிக்கான காரணத்தை - நாம் மேலே சொன்னதை - அவர்கள் நெட்வொர்க் என்ற குரலின் மூலம் கண்டு கொள்கிறார்கள். போதை அடிமையான கேரி நெட்வொர்க்கில் ஒன்றாக தங்களால் இணைய முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறான். நெட்வொர்க்கின் தோல்வியைத் தொடர்ந்து அந்தப் பகுதியே வெடித்து சிதறிவிடுகிறது.

இயக்குனர் எட்கர் Shaun of the Dead (2004), Hot Fuzz (2007) படங்களைப் பார்த்தவர்களுக்ககு இந்தப் படம் பெரிய ஆச்ச‌ரியமாக இராது. தி வேர்ல்ட்ஸ் என்ட் படம் த்‌ரி ஃப்ளேவர்ஸ் கார்னெட்டோ ட்ரையால‌ஜியின் (Three Flavours Cornetto trilogy) கடைசிப் படம். முதலிரு படங்கள்தான் Shaun of the Dead மற்றும் Hot Fuzz. 


இந்த ட்ரையால‌ஜியில் கார்னெட்டோ ஐஸ்க்‌ரிம் ஏதாவது காட்சியில் இடம்பெறும். முதல் படத்தில் ஸ்ட்ராபெர்‌ரி ஃப்ளேவர் கார்னெட்டோ. இரண்டாவதில் ப்ளூ ஒ‌ரி‌ஜினல் கார்னெட்டோ மூன்றாவதான தி வேர்ல்ட்ஸ் என்டில் பச்சை நிறத்தை குறிக்கும் மின்ட் சாக்லெட் சிப்.

இந்த மூன்று பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தவர்கள் சைமன் பெக்கும், நிக் ஃப்ரோஸ்டும். மூன்று ட்ரையால‌ஜியில் இரண்டாவது படமான ஹாட் ஃபஸ் திரைப்படமே சிறந்தது. போலீஸ் அதிகா‌ரியான சைமன் பெக் குற்றங்களே நடக்காத இங்கிலாந்தின் கிராமம் ஒன்றுக்கு மாற்றப்படுகிறார். சைமனின் கைது நடவடிக்கையும், குற்றச் செயல்களை கண்டு பிடிக்கும் திறனும் மற்ற போலீஸ் அதிகா‌ரிகளைவிட பல மடங்கு அதிகம். ஒருகட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாமல்தான் இந்த மாற்றமே.


குற்றமே நடக்காத கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் பலர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்ட கொலைகள். கொலை செய்கிறவர்களில் முக்கியமானவர்கள் அந்த கிராமத்திலுள்ள கிழங்கட்டைகள். யாராவது போட்டிருக்கும் உடை பிடிக்கவில்லை என்றாலும் கொலைதான். இந்த அபத்த நாடகத்தை சைமன் சக போலீஸ்காரர் நிக் ஃப்ரோஸ்டுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்.

எட்கர் ரைட் படங்களின் பிரதான அம்சம் ஷார்ப்பான எடிட்டிங் மற்றும் கதை சொல்லும்முறை. இந்த இரண்டும் மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதி‌ரியாக இருந்தாலும் ஹாட் ஃபஸ் பலவகைகளில் மற்ற படங்களை சிறந்தது.

மூன்று படங்களையும் pub crawl மாதி‌ரி ஒரே இரவில் தொடர்ந்து பார்த்தால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

நன்றி : வெப்துனியா


Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0


Thursday, August 28, 2014

The Call (2013) - சீரியல் சைக்கோ கில்லர்.


ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.

ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.

அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.   



அமெரிக்காவில் 911 என்ற தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911 எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம். எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம். நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும். பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.

911 சேவையில் பணியாற்றும் ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில் பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.

அடுத்து அதிரடியாக டேக்கன் நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில் படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள் கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட் வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன் ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக் கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன் மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற பன்ச் டயலாக்கை சொல்கிறான். It's already done.


 இது போன்ற சீரியல் கில்லர் ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான் என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதும்.  

கொலைக்கான காரணம் பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப் படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம் இருக்கிறது.

நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்... 

நான்கு நாட்கள் கழித்து கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில் என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே எல்லாம் செய்கிறது.  
 
 
இதற்குப் பிறகு கதையைச் சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும் போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. 

தொலைக்காட்சி தொடர்களாக எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர். பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.   

Netflix கில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, படத்தை பற்றி எழுதும் முன்பு, யாரவது எழுதி இருகிறார்களா என்று தேடும் போது வெப்துனியாவில் இந்த பதிவு கிட்டியது. அதை தன் இங்கு பகிர்ந்து உள்ளேன்.

நன்றி - வெப்துனியா 


Saturday, May 24, 2014

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!

ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது  தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.


  2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.


 ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.
   
  கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது  அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.

  
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. 
  
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!
My Rating : 8.8


Monday, February 24, 2014

பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!

சினிமாவின்  மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். 

90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது  ஓகே தான். ஆனால்  எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற  வேண்டும், ஆனால்  அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.


படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். 

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.


ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. 

படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.


இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!
My Rating: 6.5/10.


Friday, January 10, 2014

வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!

ஜில்லா முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.


கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது  விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.

இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. 


படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று  கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. 

படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது.  வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. 


இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.

வீரம்  - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.

My Rating: 7.8/10.


Sunday, December 22, 2013

Dhoom 3 (2013) - ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் !!

இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம்.  ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும். 

இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.


இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.

சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார். 


ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. 

படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை  எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.


ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.

Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!
My Rating: 6.4/10.

சமிபத்தில் எழுதியது: பிரியாணி (2013) 


Friday, December 20, 2013

பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !!

சான்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி இன்று இரவு "பிரியாணி" படத்துக்கு சென்றோம். கார்த்திக்கின் முந்திய படங்களினால் ஏகத்துக்கும் பல்பு வாங்கி இருந்த காரணத்தால் பிரியாணியை ஸ்கிப் செய்து விடலாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். இருந்தாலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தான் படத்துக்கு சென்றோம். கோவா தவிர்த்து வெங்கட்டின் அணைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு வழக்கம் போல் எங்களை ஏமாற்ற வில்லை. பிரியாணியை மிகுந்த சுவையுடன் பரிமாறி, வயறு நிறைய திருப்தியுடன் எங்களை திருப்பி அனுப்பி உள்ளார். வெங்கட் ஸ்டைலில் நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி கிட்டியது.


சுகன் (கார்த்திக்) மற்றும் பிரேம்ஜி சிறு வயது நண்பர்கள். தற்சமயம் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். கார்த்திக்கின் காதலி ஹன்சிகா. வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெரிய பணக்காரர் நாசர். கிரானைட் முறைகேட்டில் சிபிஐ அவரை கைது செய்ய துடிக்கிறது. பிளே பாய் வாழ்க்கையை வாழும் கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஆம்பூரில் தண்ணி பார்ட்டிக்கு போகும் கார்த்திக் பிரேம்ஜி கூட்டணி பிரியாணி சாப்பிட அலைகிறார்கள். பிரியாணி சாப்பிடும் இடத்தில அழகிய (!) பெண் ஒருத்தியை பார்த்து அவள் பின்னால் போகிறர்கள். ரீசர்ட்டுக்கு போகும் அவர்கள் அங்கு குடித்து விட்டு மட்டை ஆகிறார்கள். 

முழித்து பார்க்கும் போது தான் தாங்கள் பெரிய பிரச்சினையில் மாட்டி இருப்பது தெரியவருகிறது. அதுவும் யாரோ இவர்களை ப்ளான் செய்து மாட்டி விட வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன பிரச்சனை, இவர்களை மாட்டி விட நினைப்பது யார், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வெங்கட் பிரபு சரோஜா பாணியில் சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களை கூட இரண்டாம் பாதியில் மையின் சஸ்பென்ஸுடன் முடிச்சு போட்டு மிக அழகாய் அவித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஜாலி பட்டாசு என்றால் இரண்டாம் பாதி நிற்காமல் வெடிக்கும் சரவெடி. 


கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. மிகவும் சீரியஸாக நடித்து இருக்கிறார். பிளே பாய் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி வருகிறார். அக்ஷன் காட்சிகளில் செமையாய் ஸ்கோர் செய்கிறார். பிரேம்ஜியை இவர் கலாய்ச்சு எடுக்கும் காட்சிகள் அனைத்துமே அருமை. ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடி. ஹன்சிகா தனது பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார். ஒரு கவர்ச்சி (!) பாட்டு, ஹீரோ பின்னால் வர ஒரு பாட்டு என்று தன் வேலையை குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார்.

பிரேம்ஜி பற்றி என்ன சொல்ல. அவரிடம் ஆஸ்கார் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்திலே "என்ன கொடுமை சார் இது", அளவுக்கு தான் நடிக்க முடியும் என்று மிக தெரிவாக சொல்லி விட்டார்கள். நீண்ட நாட்கள் கழித்து ராம்கி, நல்ல ரோல். வயது கூடினது போல் தெரியவில்லை. செந்துரபூவே படத்தில் பார்த்தது போலே இருக்கிறார். 90's அக்ஷன் ஹீரோவான் ராம்கிக்கு கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் இன்னும் நல்ல ஸ்கோப் உள்ள அக்ஷன் பிளாக் வைத்து இருக்கலாம். நசார் வழக்கம் போல் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார். உமா ரியாஸ் சப்ரைஸ் பேக்கேஜ். காண்ட்ராக்ட் கில்லர் ரோலில் நன்றாக மிரட்டி உள்ளார். மௌன குரு படத்திருக்கு பிறகு நல்ல ரோல்.


சம்பத் மற்றும் ஜெயப்ரகாஷ் வீணடிக்க பட்டு விட்டார்கள். ஜெயப்ரகாஷ் கதாபாத்திரதால் கதைக்கு பெரிய யூஸ் எதுவும் இல்லை. போலீஸ் கேரக்டர் ஒன்று வேண்டும் என்பதால் அவரை நுழைத்து இருக்கிறார் என்று நினைக்கிறன். முந்திய வெங்கட் படத்தில் வந்த  ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என்று அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்கள். ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி. யார் யாருக்கு என்ன என்ன டயலாக் குடுத்தால் எடுபடும் என்று நன்றாக் தெரிந்து வைத்து இருக்கிறார். அதனால் தான் பிரேம்ஜி போன்ற நடிகர்கள் வைத்து தொடர்ச்சியாய் ஹிட் குடுக்க முடியாது. யுவனின் 100 படம் இது. இசை ஓகே, பின்னணி இசை எனக்கு ஏமாற்றமே. இன்னும் உழைத்து இருக்கலாம் யுவன். வெங்கட்டின் ஆஸ்தான் ஒளிபதிவாளர் சக்தி சரவணன், சேஸ்ஸிங் காட்சிகளில் கேமரா விளையாடி உள்ளது. கெஸ்ட் ரோலில் அஜித் வேறு இருக்கிறார் என்று யாரோ புண்ணியவான் விக்கிபீடியாவில் அப்டேட் செய்து இருந்தார்கள். அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. வெங்கட் பிரபுவின் சரோஜா படம் உங்களுக்கு பிடித்தது என்றால் நீங்கள் தவற விட கூடாத "பிரியாணி".

பிரியாணி - செம டேஸ்ட் மா 
My Rating: 8.0/10.
சமிபத்தில் எழுதியது : இவன் வேற மாதிரி (2013)


Tuesday, December 17, 2013

இவன் வேற மாதிரி (2013) - ஒன்னும் புதுசா இல்ல.

கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.


தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.

எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.


இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார். 

எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.

My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.


Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!

இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை  கிடைத்து இருக்க கூடாது. 

செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".


இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. 

பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.


இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. 


ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.

படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.

இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.

சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)


Tuesday, November 19, 2013

வில்லா (2013) - பயமே இல்லா திகில் படம் !!

தமிழில், இல்லை இல்லை இந்தியாவிலே இது வரை வந்த திகில் பேய் படங்களிலே சிறந்தது எது என்று என்னை கேட்டால் கண்ணை முடி கொண்டு "பீட்சா" என்று சொல்வேன். ஹார்ட் பீட் எகிறும் அளவுக்கு பயத்தை விதைத்து இருப்பார்கள். அது போக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாராலும் அவ்வளவு சீக்கிரம் யூகித்து இருக்க முடியாது. ஹாலிவுடில் பீட்சா ரீமேக் செய்யபடுவதாய் கூட ஒரு செய்தி படித்தேன். அடுத்த பாகத்துக்கான அடித்தளத்துடன் தான் பீட்சா முடிக்க பட்டு இருக்கும். ப்ரம் மேக்ர்ஸ் ஆப் பீட்சா என்கிற விளம்பரத்தோடு வெளியான வில்லா பீட்சாவின் தொடர்ச்சியாய் இருக்கும் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால் படத்தின் முதல் ட்ரைலரில் ஒரு கதாபாத்திரம் “இது சீக்வலா ?” என்று கேட்க்கும், அதற்கு கதாநாயகன் “இல்ல, இது டோட்டலா வேற கதை” என்று சொல்லுவார். பீட்சாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இது புது கதைக்களம் என்று இயக்குனர் மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அதனாலே வில்லாவை பீட்சாவுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் "வில்லா" சராசரி திகில் படத்தின் அனுபவத்தையே எனக்கு குடுத்து ஏமாற்றி விட்டது.


கதையின் நாயகன் ஜெபின் (அசோக் செல்வன்) சாதிக்க துடிக்கும் இளம் எழுத்தாளர். அவரது அப்பா (நாசர்) கோமாவில் படுத்து இறந்து போகிறார். அப்பா இறந்தவுடன், தன் குடும்ப வக்கீல் முலம்  பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா இருப்பது தெரிய வருகிறது. அதை விற்று தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க விரும்புகிறார். அதனால் அந்த வில்லாவை விற்க தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா ஷெட்டி) கூட்டி கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். அந்த வில்லாவில் சில பல ஓவியங்களை பார்க்கிறார். ஜெபின் வாழ்வில் பல வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாய் அவ் ஓவியங்களை அவர் கண்ணுக்கு தெரிகிறது. அந்த ஓவியங்களை வரைந்தது யார் ?  ஏன் வரைந்தார்கள் ? ஓவியங்களில் வரைந்த இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தனவா என்கிற சுவாரசிய முடிச்சுகளை சுவாரசியம் இல்லாமல் அவிழ்ப்பது தான் மீதி கதை. 

எனர்ஜியை உருவாகவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு, என்று நாம் எப்போதோ படித்த அறிவியல் பாடங்களை வைத்து கதையை பின்னி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி. தன் அப்பா வரைந்த ஓவியங்களிலால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் திகில் முடிச்சுகளை, எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பது தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவில்லாத திரைக்கதையின் மூலம் சொல்லி சொதப்பி விட்டார். இன்னும் நிறைய பில்ட் வொர்க் பண்ணி இருந்தால் சிறப்பாய் குடுத்து இருக்கலாம்.


மணிவண்ணனின் 100 ஆவாது நாள் படத்தில் கூட, நளனி கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பது போல் கதை அமைக்க பட்டு இருக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று எந்த ஜல்லியும் அடிக்காமல், ஏன் அது போன்று நடக்கிறது என்பதருக்கு விஜயகாந்த முலம் மிக எளிமையாக விளக்கி இருப்பார் மணிவண்ணன். ராஜவின் பின்னணி இசை சாதாரண காட்சியை கூட திகில் காட்சி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதிலும் கனவு போன்றே எதிர்காலத்தை நடப்பதை கணிக்கும் கான்செப்ட் தான், ஆனால் நெகடிவ் எனர்ஜி, பிளாக் மேஜிக், நர பலி என்று ஏதோ ஏதோ சொல்கிறார்கள். சரி திகில் காட்சிகளாவது நன்றாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை.

நாயகன் அசோக், படம் முழுக்க இறுக்கமான முக தோற்றத்துடன் தான் வருகிறார். கதையின் தேவைக்கு அப்படி வருகிறாரா, இல்லை அவரின் முகமே அப்படித்தானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திகில் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகைகள். பீட்சா விஜய் சேதுபதியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமே இல்லை. நாயகி சஞ்சிதா ஷெட்டி, சூது கவ்வும் ஷாலுமா. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. இவரின் கதாபாத்திரத்தை பீட்சா போல் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்லி குழப்பி கூல் ஆக்கி விட்டார் இயக்குனர்.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருந்தாலும் படத்தின் திரைக்கதை அவருடைய பின்னணி இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நெகடிவ் எனர்ஜியை விரட்ட எடுக்க படும் முயற்சியின் போது ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் தீபக் குமார், ஆனால் பார்வையாளனை பயமுறுத்தும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனது அவரின் துரதிஷ்டம். கடைசியாக இன்னும் மெனக்கெட்டு கட்டி இருந்தால் வில்லா பேச பட்டு இருக்கும்.

வில்லா - பயமே இல்லா திகில் படம்.
My Rating: 6.2/10.

சமிபத்தில் எழுதியது : FAR CRY 3


Sunday, November 17, 2013

FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)

இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை,  சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.


கேம் ப்ளாட்: 

ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான். 

ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.

கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.


கேம் ப்ளே:

கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.

Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும். 


வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.

இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez,  Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய  Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.

My Rating: 9.0/10