Monday, March 12, 2012

ஆன்சைட் அனுபவங்கள் - பாகம் -2

திரும்பவும் சொல்றேன் இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவின் சொந்தக்காரர் பாலா என்பவர், அவரு அன்பே சிவம் அப்படிங்கற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். இந்த தொடரின் முதல் பாகத்தில் தான் இந்த பதிவை எழுதினவர் பாலான்னு தெரிஞ்சுச்சு. அப்புறமா அவர் கிட்ட அனுமதி வாங்கி மீதி ரெண்டு பாகத்தியும் வெளியிடுறேன்.பதிவை வெளியிட அனுமதி அளித்த பாலாவுக்கு என் நன்றிகள்........  
அனுபவம் தொடர்கிறது.....

அதுதான் ஆன்சைட் போறதுக்கு எல்லா தடையும் தாண்டிடோமே அப்பறம் என்ன லைட்டான் நம்பிக்கைன்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் இருக்கு…அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு,  தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்…
 இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும். நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்…கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்…

விடியக்காலம் ப்லைட்டுனா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும்.. அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேச முடியும்!     

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னு “என்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு”  பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும் நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பே”ன்னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.

நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக.. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவளோ தான் லக்கேஜ் எடுத்திட்டு போகன்னும்னு ஒரு கணக்கு உண்டு..அதிகம் ஆகி 3  கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா,  ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதுன்னு? நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.
 மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்… பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க…பயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!
நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்…

மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!
கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்…
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்…
யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம்…
கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..

எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு Loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்..ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்… இந்த வரிகளை எத்தனை தடவை படிச்சாலும் எனக்கு அலுக்கவே அல்லுகாது. எனது முதல் ONSITE சைனா பயணத்தில் அந்த கடைசி நிமிடங்களை அப்பிடியே என் கண் முன்னே நிறுத்தும் மேல சொன்ன வரிகள். Hats of Bala. 

கடைசி நேர போன்களில் நேரம் கரைந்து கொண்டிருக்கும். ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி மேலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போலவே வெறுமையாக புலப்படும்.
(சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு சேரன் அலர்ட்டாவே இருக்கான்!!..)   
சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல சென்னை-28 ஜெய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு ஸ்கூல்ல, மொத நாள் LKG கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரி கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக. 

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு “நோ தேங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.

பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (US ன்னு வெச்சுப்போம் – ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.
அந்த ஊரு இமிகரேசன் செக்கிங்..
ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும். இந்த மாதிரி பார்டன் பாட்டை ஒரு வாட்டி நான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்ல ஒரு ஜாக்சன் துரை கிட்ட பாடி மாட்டிக்கிட்டு முழிச்ச்சேன். அந்த ஜாக்சன் துரை கிட்ட இருந்து தப்பிச்சு ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து அந்த ஊரை கண்ணு குளிர பார்த்தா தான் நம்ப பல நாள் ONSITE கனவு நிறைவேருன மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அத வார்த்தையால சொல்ல முடியாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் புரியும். அந்த பீல கொஞ்சம் நேரம் அனுபவிச்சுட்டு அப்படியே பொட்டிய தூக்கிட்டு டாக்ஸி தேடி அலைய வேண்டியது தான். 

அந்த ஊருல நமக்கு ஏற்படுற அனுபவத்தை அடுத்த கடைசி பதிவுல பார்போம். 


8 comments:

 1. அருமையான பதிவு, onsite நினைத்தாலே ஒரு கலவரம் கலந்த பயம் வருது!

  ReplyDelete
 2. @புஷ்பராஜ் உண்மை தான் நண்பரே... என்னோட முதல் onsite விமான பயணத்தை இப்ப நினைச்சாலும் வயித்துல பட்டாம் பூச்சி பறக்குற மாதிரி இருக்கும். மறக்க முடியாத தருணம் அது

  ReplyDelete
 3. நமக்கு ஐ.டி ஃபீல்டுல அனுபவம் இல்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது அனேகமாக எல்லாருடைய அனுபவத்தையும் கூறுகிறது. செம இன்ட்ரஸ்டிங்கான பதிவு. எடுத்து வழங்கியமைக்கு நன்றி ராஜ்.

  ReplyDelete
 4. இப்பதான் ஆன்சைட்டை பத்தி ஏதோ புரிஞ்சுக்க முடியுது.. க்ளைமாக்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
 5. Excellent description what a words..great.... wonderfull writing..keep it up..even the smallest stuff you mentioned very well I could think of my first travel to abroad 6 yrs ago and still living in abroad

  ReplyDelete
 6. @ Sriram..

  Thanks for the comments, this article was written by Bala 3 yrs ago. I have just shared the same :).
  This is a wonderful article, no doubt in that..the reason being that i get some unknown strange feeling when ever i read this article..
  couldn't fing words to describe the same. I have read this n number of times. Never got tried.
  I really wanted to document this article with Bala's permission, which i have done :)

  Bala's Blog: http://balavin.wordpress.com/

  ReplyDelete
 7. அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

  என்னது கொழாய்ல தண்ணி வரலையா?

  வாய் விட்டு சிரித்தேன்...! அருமையோ அருமை..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி....எல்லாம் பாலாவின் கைவண்ணம்.. :)

   Delete