Friday, January 10, 2014

வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!

ஜில்லா முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.


கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது  விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.

இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. 


படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று  கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. 

படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது.  வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. 


இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.

வீரம்  - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.

My Rating: 7.8/10.


ஜில்லா (2014) - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !!

சாண்டியாகோவில் வசிக்கும் எங்களுக்கு தமிழ் படங்கள் ரீலீஸ் ஆவதை வைத்து தான் பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து விட்டது என்கிற நினைப்பே வருகிறது. பொங்கல் போனஸாய் மாலை 6 மணி காட்சி ஜில்லாவும் இரவு 9 மணி காட்சி வீரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் "ஜில்லா" வின் பார்வை எப்படி என்று பார்போம். தலைவாவில் வாங்கிய சூடு இன்னும் ஆறாமல் இருந்த போதும், மோகன்லால் - விஜய் கூட்டணி, அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு என்றதுமே நான் சற்றே அதிகம் எதிர் பார்த்து விட்டேன். நல்ல விறுவிறுப்பாய் வந்து இருக்க வேண்டிய படம் இயக்குனரின் அனுபவமின்மையால் நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது.


போலீஸ்கார்களை வெறுக்கும் ரவுடி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர். ஷிவன் (மோகன்லால்) மதுரை ஆட்டி படைக்கும் பெரிய தாதா. அவரிடம் வேலை பார்க்கும் ஷக்தியின் (விஜய்) அப்பாவை போலீஸ் ஒருவன் கொன்றுவிடுகிறான். அதனால் போலீஸ் மீதும் காக்கி சட்டை மீதும் தீராத வெறுப்பில் ஷிவனின் வளர்ப்பு மகனாய் வளர்கிறார் ஷக்தி.  ஒரு சந்தர்பத்தில் தனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு ஆள் வேண்டுமென்று ஷிவா முடிவெடுக்க, போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) ஆக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாய் வேலைக்கு சேரும் ஷக்தி, ஊரில் ஷிவா செய்யும் தப்புகளை கண்டும் காணமல் இருக்கிறார்.

ஒரு விபத்தில் நிறைய உயிர் இழப்புகளை பார்க்கும் ஷக்தி மனம் திருந்தி நல்ல போலீஸாய் மாறி ஷிவனின் ரவடி சாம்ராஜியத்தை எதிர்க்க புறபடுகிறார். நல்லவனாய் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் லாலேட்டனை, விஜய் எப்படி திருத்துகிறார் என்பதை நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். வாயில் சுருட்டுடன் "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" பஞ்ச் பேசும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். விஜயுடன் சவால் விடும் காட்சிகளிலும், வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிருபித்து இருக்கிறார். விஜய் - லாலேட்டனை காம்போ காட்சிகளில் விஜயை இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் அசல்டாய் தோற்கடித்து விடுகிறார். 


விஜய் படத்துக்கு படம் இளமையாய் ஆகி கொண்டே போகிறார். முந்திய படத்தை விட இன்னும் பிட்டாய் மற்றும் ஸ்மார்டாய் தெரிகிறார். நடிப்பு மற்றும் மானரிசத்தில் போக்கிரி ஸ்டைலை பாலோ செய்து உள்ளார். போக்கிரி படத்துக்கு செட் ஆனா அவரின் அசால்ட் மானரிசம் இந்த கதைக்கு நிச்சயம் செட் ஆகவில்லை. சீரியஸாய் வசனம் பேச வேண்டிய காட்சிகளில் வில்லுப்பாட்டு பாட்டுகாரன் போல் பல்லை கடித்து வாயில் முனுமுப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரை சொல்லி குற்றம் இல்லை, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் செமையா ஸ்கோர் செய்யும் டான்ஸ் ஏரியாவில் இந்த முறையும் கலக்கி உள்ளார்.

காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு  சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். கதை சொல்லும் போதே உங்களுக்கு 4 சாங், அஞ்சு சீன் என்று சொல்லி தான் கால்ஷீட் வாங்குவார்கள் போல். ஒரு சீன் கூட எக்ஸ்ட்ரா இல்லை. ஹீரோ திருந்தும் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சி செய்து உள்ளார். மற்ற படி ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. காமெடிக்கு சூரி. என்ன சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.


படத்தில் வேண்டிய அளவு ட்விஸ்ட் உள்ளது. வலுவான கதையும் இருக்கிறது. ஆனால் திரைகதையை சுவாரிசியமாய் கொண்டு செல்வதில் இயக்குனர் சறுக்கி விட்டார். ஹீரோவின் கெத்தை காட்ட வேண்டும் என்றால் 
வில்லன்னும் அதே அளவு கெத்துடன் இருக்க வேண்டும், இது மாஸ் சினிமாவின் எழுதபடாத விதி. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பதே கடைசி இருபது நிமிடத்தில் தான் தெரியவருகிறது. வில்லன் யார் என்கிற சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் வேகம் எடுப்பது போல் தெரிந்தாலும், அதன் பிறகு சப்பென்று முடிந்து விடுகிறது. இன்னொரு பெரிய குறை, லாஜிக் என்கிற வஸ்துவை நீங்கள் பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. அத்தனை லாஜிக் மீறல்கள்.

இசை இமான், பாடல்கள் எல்லாமே அட்டகாசம், பாடல்கள் காட்சியமைப்பும் செம. பின்னணி இசை சில காட்சிகளில் காதை பதம் பார்த்தாலும், நிறைய காட்சிகளில் நன்றாக இருந்தது. நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் போக்கிரி பொங்கல் போல் வந்து இருக்கும். நல்ல நடிகர்கள், நல்ல கதை இருந்தும் சொதப்பியது இயக்குனர் மட்டுமே. 

ஜில்லா  - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !! 

My Rating: 6.9/10.