Showing posts with label கொரியன் சினிமா. Show all posts
Showing posts with label கொரியன் சினிமா. Show all posts

Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0


Sunday, October 27, 2013

New World (2013) - கொரியன் கேங்ஸ்டர் மூவி !!!

கேங்ஸ்டர் படங்களின் மீது எனக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்பு உண்டு. கேங்ஸ்டர் படங்கள் மீதான் என்னுடைய காதல் 8 வயதில் ஆரம்பம் ஆனது என்று நினைக்கிறன். அந்த வயதில் தான் "நாயகன்" படம் பார்த்தேன். கோவை அருண் தியேட்டரில் நாயகன் படம் பார்த்து, கமல் இறக்கும் இறுதி காட்சியில் நான் தேம்பி தேம்பி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பெரியவன் ஆனதும் வேலு நாயகர் போல் நானும் கேங்ஸ்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணியது உண்டு. விவரம் புரிய ஆரம்பித்தவுடன் நான் அதிக முறை ரசித்து பார்த்த ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் "பாட்ஷா". ரஜினி டானாக மாறி படியில் நடந்து வரும் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு வேர்த்து விடும். IMDB மற்றும் ஹாலிவுட் படங்களின் அறிமுகம் கிடைத்தவுடன் நான் தேடி தேடி பார்த்தது அனைத்துமே கேங்ஸ்டர் படங்கள் தான். 


இன்று வரையில் நான் சிறந்த கேங்ஸ்டர் படமாக கருதுவது கொப்பாலாவின் "The God Father" படம் தான். அதன் பிறகு நான்  வேர்க வேர்க்க ரசித்து பார்த்த ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் "The Departed". பிறகு தான் தெரிந்தது "The Departed" "Infernal Affairs" என்கிற கேன்டனீஸ் படத்தின் தழுவல் என்று. அன்று ஆரம்பித்த ஆசியன் படங்கள் மீதான் மோகம் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சமிபத்தில் நண்பர் பிரதீப் ரெகமென்ட் செய்த கொரியன் படமான "New World" பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. Infernal Affairs, Departed அளவுக்கு வேர்கவில்லை என்றாலும், மிக சிறந்த த்ரில்லர் படம் பார்த்த திருப்தி  கிட்டியது. பிரதீப்க்கு என் நன்றிகள்.

படத்தின் ஆரம்பம்பமே ரத்த களரி தான். போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் ஒரு நபரை சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள் "கோல்ட்மூன்" என்கிற கொரிய மாபியா கும்பலை சேர்ந்தவர்கள்.  கோல்ட்மூன் நிறுவனம் கொரியாவின் மிக பெரிய கார்ப்பரேட் மாபியா கூட்டமைப்பு. இந்த மாபியா கும்பலில் கடந்த எட்டு வருடங்கள் விசுவாசமாய் கொலை செய்து வருபவன் கதையின் நாயகன் "Jung-Jae". இவர் போலீஸ் என்பது படம் ஆரம்பித்தவுடன் நமக்கு தெரிந்து விடுகிறது.

 Jung-Jae-னை ஆட்டுவிப்பது போலீஸ் கமிஷனர் Min-sik Choi. "Old Boy" படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியவர். இதிலும் வெயிட்டான ரோல். இவரின் ஒரே மிஷன் கோல்ட்மூன் கூட்டமைப்பை போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்து அவர்களை மொத்தமாய் ஒழித்து புது உலகம் படைப்பது தான். அந்த ஆபரேஷனுக்கு பெயர் தான் "New World". ஆபரேஷனின் ஒரு பகுதியாய் தான் Jung-Jae போன்று பல போலீஸ் அதிகாரிகளை கோல்ட்மூன் நிறுவனத்தில் ஊடுருவி இருப்பார்கள். யார் போலீஸ், யார்  மாபியா என்று நம்மால் யூகிக்க முடியாத படி ஏகப்பட்ட ட்விஸ்ட்.


கோல்ட்மூன் கூட்டமைப்பின் சேர்மன் கார் விபத்தில் மர்மமான முறையில் கொல்லபடுகிறார். அடுத்த தலைவருக்கான் தேர்தல் நடைபெறும் வேளையில், சேர்மன் பதவிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களான Jeong மற்றும் Lee யிடையே கடும் கேங் வார் மூள்கிறது. கதையின் நாயகன் "Jung-Jae" Jeong - கின் வலது கை. இவர்களின் கேங் வாரின் இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகதிருக்கு இருக்கும் மிக மெல்லிய வித்தியாசத்தை மிக அழகாக காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர் Hoon-Jung Park. முதல் காட்சி மற்றும் கார் பார்கிங் சண்டை தவிர்த்து அதிக ரத்த வன்முறை இல்லாமல் படத்தை கொண்டு சென்றது பெரிய ஆறுதல்.  "The GodFather" படத்தின் சாயல் இல்லாமல் எந்த கேங்ஸ்டர் படமும் எடுக்க முடியாது. அல் பசினோ டான்னாக மாறும் காட்சியை அவரின் மனைவி மிரட்சியுடன் கதவின் வழியே பார்க்கும் காட்சி போன்று இதிலும் உள்ளது. 


கொரியன் கேங்ஸ்டர் படங்களின் சிறப்பே, கேங்ஸ்டர் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். செம ஸ்டைலிஷாய் இருப்பார்கள். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் சீப் அதிகாரிகள் போல் இருப்பார்கள். இந்த படத்திலும் செம காஸ்ட்யூம். அதிக வன்முறையை காட்டாமல், வசனங்கள் மூலமாய் சூழ்நிலையின் வீரியத்தை சொல்லி விடுகிறார் இயக்குனர். குறைந்த அக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இருக்கும் இரண்டு சண்டை காட்சிகள் ரியலிஸ்டிக்காக இருப்பது மற்றுமோர் சிறப்பு. 

இயக்குனர் Park Hoon Jeong இதற்க்கு முன்பு "I Saw the Devil" என்கிற கிரைம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதம். பின்னணி இசை படத்தின் டெம்போவை குறைக்காமல் கொண்டு செல்வதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. The Departed ஸ்டைல் கேங்ஸ்டர் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் தவற விட கூடாத படம் New World.

சமிபத்தில் எழுதியது : The chaser (2008)

New World  - கொரியன் கேங்ஸ்டர் மூவி
My Rating: 7.8/10.