Thursday, October 31, 2013

ஆரம்பம் (2013) - மாஸ் ஒன் மேன் ஷோ !!!

சான்டியாகோவில் எந்த தமிழ் படம் ரீலீஸ் ஆனாலும், தவறாது முதல் காட்சியே அட்டென்டன்ஸ் போடும் நாங்கள், அஜித்தின் ஆரம்பத்தை மட்டும் தவற விட்டு விடுவோமா என்ன ? வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் ஆஜர் ஆனோம். வீக் டே என்ற போதிலும் நிறைய தமிழ் மக்களை தியேட்டரில் காண முடிந்தது. அதில் முக்காவாசி தீவிர அஜித் ரசிகர்கள், மீதி பேமலி ஆடியன்ஸ். தியேட்டர் 70% நிரம்பியது. படம் எப்படி என்று இப்பொழுது பார்போம். ஆரம்பம் படத்தின் ட்ரைலர் என்னை பெரிதாய் கவரவில்லை. அதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் சென்றேன். எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் என்னை என்றுமே ஏமாற்றியது இல்லை. ஆரம்பமும் என்னை ஏமாற்றவில்லை. பில்லா -2 வில் சராசரி ரசிகனை கவர தவறிய அஜித், இதில் நின்று மங்காத்தா ஆடி உள்ளார். 


மும்பை நகரில் முன்று முக்கிய இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. குண்டும் வைத்து, அதை போலீஸ்க்கும் தகவல் குடுக்கிறார் அஷோக் (அஜித்). இதற்க்கு இடையில் கம்ப்யூட்டர் ஹேக்கரான ஆர்யாவை கடத்தி கொண்டு வந்து, அவர் மூலமாக மும்பை நகரில் இயங்கி வரும் முக்கிய டிவி சேனலான "பிளாஷ் டிவியை" ஹேக் செய்து அதன் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துகிறார் அஜித். அது போக ஆர்யாவை வைத்து கொண்டே சில கொலைகளை வேறு செய்கிறார். அஜித் குறிவைப்பது மகாராஷ்டிரா ஹோம் மினிஸ்டர் மகேஷ் மஞ்ச்ரேகர் சாம்ராஜியத்தை. அஜித் யார் ? அவருக்கும் ஹோம் மினிஸ்டர்ருக்கும் என்ன தொர்பு. ஏன் குண்டுவெடிப்பு, டிவி சேனல் ஹேக்கிங் மற்றும் கொலைகளை செய்கிறார் என்கிற மர்ம முடிச்சுகளை முதல் பாதியில் போட்டு, அத்தனை முடிச்சுகளையும் பக்கா ஒன் மேன் அக்ஷன் பேக்கேஜ் முலம் அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

ஊருக்கே பிடிக்காதா பில்லா-2 எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, காதல், காமெடி என்ற வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சியாய் எனக்கு தெரிந்தது. பில்லா-2 தோல்வி அஜித்தை பழைய குருடி கதவை திறடி என்பது போல் வழக்கமான் தமிழ் சினிமாவிற்குள் இழுத்து விடும் என்று நினைத்தேன். அதற்க்கு இடம் தராமல், மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் இறங்கிய அஜித்தை பாராட்டியே ஆக வேண்டும். தனது பலம் என்ன வென்று மிக சரியாக புரிந்துவைத்து உள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் என்று எந்த விஷ பரிட்சையும் செய்யாமல், மங்காத்தாவில் செய்ததை போல், தனக்கு மிக கச்சிதமாய் பொருந்திய நெகடிவ் கதாபாத்திரத்தை சரியாய் செலக்ட் செய்தது மறுபடியும் ஜெயித்து காட்டி இருக்கிறார்.


அஜித் செம ஸ்மார்டாக இருக்கிறார். அவருக்கு என்றே சில டிரேட் மார்க் மேனரிசம் உண்டு. படம் நெடுக்க கூலிங்கிளாஸ் சகிதம் தான் வலம்வருகிறார். பல காட்சிகளில் பிட்டாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் ரொம்பவே குண்டாய் தெரிகிறார். டான்ஸ் பற்றி ரெண்டே வார்த்தையில் சொன்னால் ஹீ..ஹீ...பஞ்ச் டயலாக் பேசாமல் மாஸ் காட்சி குடுக்க ரஜினிக்கு பிறகு அஜித் தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால், "மேக் இட் சிம்பிள்" என்று அதிக அலட்டல் இல்லாமல், சிம்பிள் பட் பவர்புல் பெர்பார்மனஸ் வழங்கி உள்ளார். சரியாய் சொன்னால் ஒத்தை ஆளாய் படத்தை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தாங்கி உள்ளார். 

ஸ்க்ரீன் முழுக்க அஜித் ராஜ்ஜியம் செய்வதால், ஆர்யா அமெரிக்க மாப்பிளை போல் வந்து செல்கிறார். செகண்ட் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது. ஆனால் தனக்கு குடுத்த வேலையை மிக சரியாய் செய்து இருக்கிறார். அஜித்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளிலும், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் செம த்ரில்லர். ஆர்யா குண்டு பாய்யாய் தாப்ஸியிடம் லவ்வை சொல்லும் காட்சிகள் தான் காமெடி காட்சிகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போல் இருக்கிறது. பாவம் இயக்குனருக்கும் காமெடிக்கும் வெகு தூரம் என்று மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆர்யா, தாப்ஸி கெமிஸ்ட்ரி சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாரா அஜித்திற்கு உதவி புரிகிறார். அஜித் யார் தெரியுமா என்று பிளாஷ்பேக் சொல்கிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. அதுல் குல்கர்னி, கிஷோர், ராணா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் காண கிடைக்கிறது. ஆனால் அஜித் என்னும் திமிங்கலம் முன்பு இவர்கள் எல்லாம் சிறு சிறு மீன்கள் போல் தான் தெரிகிறார்கள். 


பாடல்கள் செம சொதப்பல். அஜித்திருக்கு என்று வரும் போது மட்டும் எப்படி தான் யுவனுக்கு பின்னணி அமைகிறதோ தெரியவில்லை. பிரமாத படுத்தி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை அட்டகாசம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் மும்பை மிக அழகாக தெரிகிறது. இமையமலை கிளைமாக்ஸ் கன் பைட் அதகளம். ATF க்கு வழங்க பட்ட புல்லெட் ப்ரூப் ஜாக்கெட்டில் நடைபெற்ற ஊழலை பற்றி சொல்ல ஆரம்பித்து, படம் எங்கெங்கோ செல்கிறது. லாஜிக் ஓட்டை ஓசோன் மண்டல ஓட்டையை விட மிக பெரிதாக இருக்கிறது. ஆனாலும் பரபரப்பான அக்ஷன் காட்சிகள் முலம் லாஜிக் ஓட்டைகளை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் படம் மிக வேகமாய் நகர்கிறது. மொத்தத்தில் கூட்ஸ் வண்டி போல் மெதுவாய் ஆரம்பிக்கும் படம், பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து, பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வேகம் குறைந்து, பிறகு சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிகிறது. 

சமிபத்தில் எழுதியது : New World (2013) 
ஆரம்பம் - மாஸ் ஒன் மேன் ஷோ !!!
My Rating: 7.9/10.


Sunday, October 27, 2013

New World (2013) - கொரியன் கேங்ஸ்டர் மூவி !!!

கேங்ஸ்டர் படங்களின் மீது எனக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்பு உண்டு. கேங்ஸ்டர் படங்கள் மீதான் என்னுடைய காதல் 8 வயதில் ஆரம்பம் ஆனது என்று நினைக்கிறன். அந்த வயதில் தான் "நாயகன்" படம் பார்த்தேன். கோவை அருண் தியேட்டரில் நாயகன் படம் பார்த்து, கமல் இறக்கும் இறுதி காட்சியில் நான் தேம்பி தேம்பி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பெரியவன் ஆனதும் வேலு நாயகர் போல் நானும் கேங்ஸ்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணியது உண்டு. விவரம் புரிய ஆரம்பித்தவுடன் நான் அதிக முறை ரசித்து பார்த்த ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் "பாட்ஷா". ரஜினி டானாக மாறி படியில் நடந்து வரும் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு வேர்த்து விடும். IMDB மற்றும் ஹாலிவுட் படங்களின் அறிமுகம் கிடைத்தவுடன் நான் தேடி தேடி பார்த்தது அனைத்துமே கேங்ஸ்டர் படங்கள் தான். 


இன்று வரையில் நான் சிறந்த கேங்ஸ்டர் படமாக கருதுவது கொப்பாலாவின் "The God Father" படம் தான். அதன் பிறகு நான்  வேர்க வேர்க்க ரசித்து பார்த்த ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் "The Departed". பிறகு தான் தெரிந்தது "The Departed" "Infernal Affairs" என்கிற கேன்டனீஸ் படத்தின் தழுவல் என்று. அன்று ஆரம்பித்த ஆசியன் படங்கள் மீதான் மோகம் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சமிபத்தில் நண்பர் பிரதீப் ரெகமென்ட் செய்த கொரியன் படமான "New World" பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. Infernal Affairs, Departed அளவுக்கு வேர்கவில்லை என்றாலும், மிக சிறந்த த்ரில்லர் படம் பார்த்த திருப்தி  கிட்டியது. பிரதீப்க்கு என் நன்றிகள்.

படத்தின் ஆரம்பம்பமே ரத்த களரி தான். போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் ஒரு நபரை சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள் "கோல்ட்மூன்" என்கிற கொரிய மாபியா கும்பலை சேர்ந்தவர்கள்.  கோல்ட்மூன் நிறுவனம் கொரியாவின் மிக பெரிய கார்ப்பரேட் மாபியா கூட்டமைப்பு. இந்த மாபியா கும்பலில் கடந்த எட்டு வருடங்கள் விசுவாசமாய் கொலை செய்து வருபவன் கதையின் நாயகன் "Jung-Jae". இவர் போலீஸ் என்பது படம் ஆரம்பித்தவுடன் நமக்கு தெரிந்து விடுகிறது.

 Jung-Jae-னை ஆட்டுவிப்பது போலீஸ் கமிஷனர் Min-sik Choi. "Old Boy" படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியவர். இதிலும் வெயிட்டான ரோல். இவரின் ஒரே மிஷன் கோல்ட்மூன் கூட்டமைப்பை போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்து அவர்களை மொத்தமாய் ஒழித்து புது உலகம் படைப்பது தான். அந்த ஆபரேஷனுக்கு பெயர் தான் "New World". ஆபரேஷனின் ஒரு பகுதியாய் தான் Jung-Jae போன்று பல போலீஸ் அதிகாரிகளை கோல்ட்மூன் நிறுவனத்தில் ஊடுருவி இருப்பார்கள். யார் போலீஸ், யார்  மாபியா என்று நம்மால் யூகிக்க முடியாத படி ஏகப்பட்ட ட்விஸ்ட்.


கோல்ட்மூன் கூட்டமைப்பின் சேர்மன் கார் விபத்தில் மர்மமான முறையில் கொல்லபடுகிறார். அடுத்த தலைவருக்கான் தேர்தல் நடைபெறும் வேளையில், சேர்மன் பதவிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களான Jeong மற்றும் Lee யிடையே கடும் கேங் வார் மூள்கிறது. கதையின் நாயகன் "Jung-Jae" Jeong - கின் வலது கை. இவர்களின் கேங் வாரின் இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகதிருக்கு இருக்கும் மிக மெல்லிய வித்தியாசத்தை மிக அழகாக காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர் Hoon-Jung Park. முதல் காட்சி மற்றும் கார் பார்கிங் சண்டை தவிர்த்து அதிக ரத்த வன்முறை இல்லாமல் படத்தை கொண்டு சென்றது பெரிய ஆறுதல்.  "The GodFather" படத்தின் சாயல் இல்லாமல் எந்த கேங்ஸ்டர் படமும் எடுக்க முடியாது. அல் பசினோ டான்னாக மாறும் காட்சியை அவரின் மனைவி மிரட்சியுடன் கதவின் வழியே பார்க்கும் காட்சி போன்று இதிலும் உள்ளது. 


கொரியன் கேங்ஸ்டர் படங்களின் சிறப்பே, கேங்ஸ்டர் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். செம ஸ்டைலிஷாய் இருப்பார்கள். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் சீப் அதிகாரிகள் போல் இருப்பார்கள். இந்த படத்திலும் செம காஸ்ட்யூம். அதிக வன்முறையை காட்டாமல், வசனங்கள் மூலமாய் சூழ்நிலையின் வீரியத்தை சொல்லி விடுகிறார் இயக்குனர். குறைந்த அக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இருக்கும் இரண்டு சண்டை காட்சிகள் ரியலிஸ்டிக்காக இருப்பது மற்றுமோர் சிறப்பு. 

இயக்குனர் Park Hoon Jeong இதற்க்கு முன்பு "I Saw the Devil" என்கிற கிரைம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதம். பின்னணி இசை படத்தின் டெம்போவை குறைக்காமல் கொண்டு செல்வதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. The Departed ஸ்டைல் கேங்ஸ்டர் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் தவற விட கூடாத படம் New World.

சமிபத்தில் எழுதியது : The chaser (2008)

New World  - கொரியன் கேங்ஸ்டர் மூவி
My Rating: 7.8/10.


Sunday, October 20, 2013

The chaser (2008) - சீரியல் கில்லரை துரத்தும் பிம்ப் !!

தமிழ், ஹாலிவுட் தவிர்த்து நான் மிகவும் விரும்பி பார்ப்பவை கொரியன் படங்களே. சில கொரியன் படங்கள் தரத்தில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சி விடும். தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது தொழில்நுட்பத்தை அல்ல, தொழில்நுட்பத்தில் இவர்கள் இன்னும் அவதார், அவென்ஜர்ஸ் அளவுக்கு வளரவில்லை என்றாலும், புதுமையான கதை களம், அற்புதமான திரைக்கதை, பர பர அக்ஷன் படங்கள் குடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். உலக சினிமாவில் அணைத்து ஜெனரில் இருந்தும் சிறந்த படங்களை தேர்வு செய்தால், அந்த அந்த ஜென்ரில் இருக்கும் முதல் ஐந்து படங்களில் கண்டிப்பாய் கொரியன் படங்கள் தவறாமல் இடம் பிடித்து இருக்கும். The chaser 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மிக சிறந்த த்ரில்லர் படம். சவுத் கொரியாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்ட படம். 


கதையின் நாயகன் "Yun-seok Kim", சந்தர்ப வசத்தால் தன் டிடெக்டிவ் வேலையை விட்டு விட்டு விபசாரத்துக்கு பெண்களை சப்பளை செய்யும் மாமா வேலை பார்க்கிறான். தொழில்க்கு அனுப்பிய அவனது இரு பெண்களை திடீரென்று மாயமாய் மறைந்து போகிறார்கள். ஒரு கஸ்டமரிடம் இருந்து அழைப்பு வர, அவனது டீமில் இருக்கும் "Mi-jin" என்கிற பெண்ணை அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய அனுப்புகிறான். "Mi-jin" க்கு எட்டு வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. கால் வரும் நேரத்தில் அவளுக்கு உடம்பு முடியாமல் வேறு இருக்கிறது. 

Yun-seok Kim அவளை மிகவும் வற்புறுத்தி அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய சொல்கிறான். Kim ஆபீஸில் உட்கார்ந்து இருக்கும் போது தான் அந்த கஸ்டமரின் போன் நம்பரை எதேச்சையாக பார்க்கிறான். "4885" என்று முடிகிறது அந்த நம்பர். கடைசியாக காணாமல் போன அவனது இரு கால் கேர்ள்சை அழைத்த அதே நம்பர். "Mi-jin"-னை பகடை காயாய் வைத்து காணமல் போன அவனது இரண்டு பெண்களை மீட்க நினைக்கிறான். 

Mi-jin வேறு வழி இல்லாமல் "4885" கஸ்டமரின் வீட்டுக்கு செல்கிறாள். ரெஸ்ட் ரூம் சென்று அங்கிருந்து Kim க்கு அவள் இருக்கும் வீட்டின் அட்ரெசை அனுப்புவது தான் திட்டம். ரெஸ்ட் ரூமில் தன் மொபைல் போனை எடுத்தால், அதில் சிக்னல் பார் சீரோ. வெளியில் வந்தால் கையில் சுத்தியில் மற்றும் உளியுடன் "4885". Yun-seok Kim Mi-jin-னை தேடி கொண்டு அதே ஏரியாவில் வந்து சேர்கிறான். இங்கு இருந்து வேகம் பிடிக்கும் படம் இறுதி வரை பரபரப்பு குறையாமல் பயணம் செய்கிறது. Mi-jin மீட்கப்பட்டாளா ?? "4885"  யார் ?? காணமல் போன கால் கேர்ள்ஸ் என்ன ஆனார்கள் ?? போன்ற கேள்விக்கான விடைகளை "நெட்பிளிக்ஸ்" அல்லது "டோரென்ட்" உதவியை நாடி அறிந்து கொள்ளுங்கள். 


படம் சீரியல் கில்லரை பற்றியது என்று முன்பே சொல்லி விட்டேன். ஆனால் நார்மல் படங்களில் இருப்பதை விட ரத்த வன்முறை குறைவு தான். படத்தின் போஸ்டரில் "புருடல்" என்று விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதித கொடூர காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ அதை தவிர்த்து இருப்பார். பின்னணியில் மெல்லிய இசை தவழ, ரத்தம் தெறிக்க நடைபெறும் ஒரு கொலை காட்சியை தவிர படத்தில் கொடூர காட்சிகள் ஒன்றுமேயில்லை. அதிலும் கூட பார்வையாளனின் கற்பனைக்கே அந்த காட்சியை விட்டு விடுவது இன்னும் சிறப்பு.

Yun-seok Kim தேர்ந்த டிடெக்டிவ். அவன் ஏன் பிம்ப் ஆனான் என்பதருக்கு எந்த சோக பிளாஷ்பேக்கும் இல்லாதது பெரிய ஆறுதல். இவரது கதாபாத்திர தன்மையை ஆரம்ப காட்சிகளில் இயக்குனர் நன்றாக புரிய வைத்து விடுவார். தனது டீமில் இருக்கும் கால் கேர்ள்ஸுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவிக்கு ஓடி வருவதில் இருந்ததே பிம்ப் ஆக இருந்தாலும் அவனுக்கும் ஈரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. Mi-jin அடைக்க பட்ட வீட்டை இவர் தேடி செல்லும் ட்ரையல் செமையாக இருக்கும். கிடைக்கும் தடையங்களை வைத்து சிக்கலான முடிச்சுகள் இவர் அவிழ்க்கும் காட்சிகளில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 


Jung-woo Ha "4885" சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர். இவருக்கும் எந்த பிளாஷ்பேக்கும் வைக்காமல், இவர் ஏன் கால் கேர்ள்சை தேடி தேடி கொல்கிறார் என்பதை ஒரு விசாரணை காட்சியில் விவரித்து இருப்பார்கள். அட்டகாசமான காட்சி அது. விசாரணை செய்பவர் Jung-woo தொடர் கொலைகளை செய்வதின் காரணத்தை விவரிக்கும் காட்சியில் இவரின் முகபாவனைகைகள் மிகவும் தந்துருபமாய் இருக்கும். இந்த பூனையும் பால் குடிக்குமா போன்ற இவரின் முகம் சீரியல் கில்லர் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி உள்ளது. 

Na Hong-jin என்பவரின் முதல் படைப்பு The chaser. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் அப்பட்டமாய் தெரியும். ஆனால் திரைகதையின் வேகத்தில் அந்த குறைகள் பெரிதாய் தெரியாது.  இதே படத்தை தழுவி (??!) ஹிந்தியில் மர்டர் -2 என்கிற காவியத்தை எடுத்தார்கள். நல்ல த்ரில்லர் படங்களை பார்க்க விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. 

The chaser - செம த்ரில்லர் !!!
My Rating: 8.1/10.


Sunday, October 13, 2013

வணக்கம் சென்னை - (2013) மொன்னை காமெடி

சாண்டியாகோவில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரீலீஸ் செய்ய பட்டது. மொத்தம் முன்று காட்சிகள், வெள்ளி மற்றும் சனி இரவு காட்சியாக "நய்யாண்டி" படமும் ஞாயிறு பகல் காட்சி "வணக்கம் சென்னை" போடுவதாய் "SD Talkies" ஸில் விளம்பரம் செய்ய பட்டது. வெள்ளி இரவு ஒரே காட்சியில் "நய்யாண்டி" படுமோசமாய் ஊத்தி கொள்ள, சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் "வணக்கம் சென்னை" திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவை வாழ வைக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக திரையரங்கு சென்று இந்த மகா காவியத்தை கண்டு ரசித்தோம். ககலைஞர் குடும்பத்தில் எனக்கு பிடித்த நபரான உதயநிதியின் துணைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் முதல் படம். உலக சினிமாவை எதிர்பார்க்காமல் டைம் பாஸாக மட்டும் இருந்தால் போதும் என்கிற எண்ணத்திலே தியேட்டரில் நுழைந்தோம். இறுதியில் எங்கள் எண்ணம் நிறைவேறியது என்றே சொல்லலாம்.


அஜய் (மிர்ச்சி சிவா) ஐடி வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார். அஞ்சலி (ப்ரியா ஆனந்து) தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை எற்படுகிறார். அஞ்சலி ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை ஒருவருக்கு நிச்சயம் செய்ய பட்டவர். ஆரம்பம் முதலே இருவருக்கு ஒத்து போக மாட்டேன் என்கிறது. எலியும் பூனையும்போல போல் இருந்த இருவரும் எப்படி வாழ்கையில் (!!)  இணைகிறார்கள் என்பதை ஜிவ்வ்வ்வ்வு போன்று இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மிர்ச்சி சிவா வழக்கம் போல் நடித்து இருக்கிறார். "தமிழ் படத்தில்" அவரின் நோ எக்ஸ்பிரஷன் முகம் ஒத்து போனது என்பதற்காக எல்லா படத்திலும் அதே போன்று நோ எக்ஸ்பிரஷன் தான் காட்டுவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. சில இடங்களில் "குமுதம்" புக்கில் வரும் ஜோக்ஸ் போன்று மொக்கை போடுகிறார். சில காட்சிகள் "ஆனந்த விகடன்" புக் ஜோக்ஸ் போன்று ஸ்மைல் பண்ண கூடிய டயலாக்ஸ் சொல்கிறார். ரொமாண்டிக் காட்சிக்கும் இவருக்கும் வெகு தூரம் என்று மறுபடியும் நிருபித்து உள்ளார். டான்ஸா, அப்படினா என்னவென்று பாடல் காட்சிகள் நாம் தேட வேண்டியுள்ளது. வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும். சிவாவை இந்த படத்திருக்கு செலக்ட் செய்த காரணத்தை எப்படி யோசித்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.


ப்ரியா ஆனந்து லண்டன் வாழ் பெண்ணாய் வந்து செல்கிறார். தேங்காய் எண்ணை  மாடல் போல் முகம் முழுக்க எண்ணையை தடவி கொண்டு திரிகிறார். சோகக் காட்சிகளில் கோபமாய் முகத்தை வைத்து, கோபமான காட்சிகளில் சோகமாய் முகத்தை வைத்து நடிப்பில் புதிய பாணியை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார். எத்தனையோ மொக்கை பீஸ்களை பார்த்த தமிழ் சமுகம் இவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு குடுக்காமலா போய் விடும். கண்டிப்பாய் குடுக்கும். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடித்தால் தமிழ் சினிமா எங்கோ சென்றுவிடும்.

சந்தானம் வீடு புரோக்கராக வருகிறார். இடைவேளைக்கு சிறிது முன்பு தான் இவரின் என்ட்ரி. படத்தின் இரண்டாம் பாதியில் சந்தானம் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். வழக்கம் போல் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து "ப்ரோ" வேலையை செய்கிறார். ஏழு காட்சிகள் இவருக்கு என்றால், அதில் ஆறு காட்சிகளில் சரக்கு அடித்து கொண்டே தான் இருக்கிறார். இவரின் டாஸ்மாக் காமெடிகள் ரொம்பவே புளித்து போய் விட்டது. சீக்கிரம் வேற ஜெனருக்கு மாறுங்க பாஸ். 


தமிழ் சினிமா அக்மார்க் லண்டன் மாப்பிள்ளையாக "ராகுல் ரவீந்திரன்". வந்து பல்ப் வாங்கி செல்கிறார். நிழல்கள் ரவி, ஊர்வசி, ரேணுகா ஆகியோர்கள் வந்து செல்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி கணவருக்கு அதிகம் செலவு வைக்காமல் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் படத்தை முடித்து உள்ளார். சந்தானம், சிவா இருந்தும் டபுள் மீனிங் ஆபாச வசனங்கள் இல்லாதது இயக்குனரின் காரணத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. காஸ்டியூம் மற்றும் லைட்டிங்கில் இவரின் ரசனை நமக்கு தெரிந்து விடுகிறது. 

 ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். எங்கள் மாவட்டத்தை மிக அழகாய் படம் பிடித்து இருந்தார். வெஸ்டர்ன் ஆல்பத்தில் இருந்து இசையை சுட்டு நமக்கு வழங்கி உள்ளார் அனிருத். பிரபல பாடல்களை சுடாமல் அதிக பிரபலம் இல்லாத பாடல்களில் இருந்து சுட்டு தன் திறமையை நிருபித்து உள்ளார். இத்தனை குறைகள் இருந்தும் படம் தேறி விடும் என்றே தான் எனக்கு படுகிறது. காரணம் "நய்யாண்டி" மட்டுமே. 

வணக்கம் சென்னை - மொன்னை காமெடி 
My Rating: 6.0/10.


Monday, October 07, 2013

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - (2013) ரொம்ப சுமாரான படம் தான் !!!

போன வாரம் சொன்னது போலவே இந்த வாரம் சான்டியாகோ தமிழ் திரைஅரங்கில் விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா" ரீலீஸ் ஆனது. படம் வியாழன் அன்றே ராஜ்தமிழ் இணையத்தில் கிடைத்தாலும், தமிழ் சினிமாவை வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் சென்று "சுமார் மூஞ்சி குமாரை" கண்டு கழித்தோம். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் சென்றேன். ஆனாலும் படம் எனக்கு முழு திருப்தியை தர வில்லை. ஷார்ட் பிலிம் ஆக எடுக்க வேண்டிய கதையை முழு நீள திரைப்படமாக எடுத்த காரணத்தால் நிறைய காட்சிகளில் நெளிய வேண்டிய நிலைமைக்கு தள்ள பட்டேன். 


ஒரே நாளில் நடைபெறு கதை தான் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா. இரண்டு மையின் டிராக் கதை. இரண்டு சைடு டிராக்  கதை. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது தான் மீதி கதை. நான்கு கதைகளில் மிக அதிகம் ஸ்கோர் செய்வது "சுமார் முஞ்சி குமார்" மற்றும் "ரொம்ப சுமார் முஞ்சி குமார்" மட்டுமே. சுமார் முஞ்சி குமரேசனாக விஜய் சேதுபதி. வாழ்ந்து இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சரியாக சொன்னால் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கலகலப்பு. மற்ற முன்று டிராக்கும் என் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கடைசி இருபது நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.

விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு வழங்கி உள்ளார்.. சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாய் டயலாக் டெலிவரி செய்கிறார். சென்னை பாஷை அனாயாசமாக வருகிறது. "பிரண்டு லவ் மேட்டர்,  பீல் ஆகிட்டாப்ல, ஆப் அடிச்சா கூல் ஆகிடுவாப்ல" என்கிற எபிக் டயலாக்கை "என்னாச்சு, கிரிக்கெட் விளையாண்டோம்" போல் திரும்ப திரும்ப சொன்னாலும் கொஞ்சம் கூட அலுக்கவே இல்ல. தியேட்டரில் இருந்த இருபது பேரும் வி.பு.சி. அதே போல் "குமுதா ஹாப்பி" என்கிற டயலாக்கும் அட்டகாசம். இவர் விழுந்து விழுந்து காதலிக்கும் குமுதா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மேக் ஆப் தான் ரொம்ப ஓவர். 


நடுநாசி நாய்கள், மங்காத்தா படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த அஸ்வின்க்கு இந்த படத்தில் கொஞ்சம் பெரிய ரோல். சுமாராய் நடித்து உள்ளார். "குமுதம்" ஒரு பக்க கதை போல் இருக்கிறது இவர் போர்ஷன். எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கும் இவர் மேனேஜர், ஒரு கட்டத்தில் உன்னோட நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொல்வது, அட போங்க பாஸ், பஞ்ச தந்திர நீதி கதை போல் இருந்தது. இவர்  விழுந்து பொரண்டு காதலிக்கும் "ரொம்பவே சுமார் முஞ்சி பிகர்" சுவாதி. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சுகர் சுகர் பேஷண்ட் தாதாவாக பசுபதி, முதல் பாதியில் சுமார் முஞ்சி குமார் - குமுதா காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார். இவர் வரும் காட்சிகள் காமெடி கலாட்டா.

இது போக இரண்டு கிளை கதைகள். ஒரு கள்ளக்காதல் கதை. இது தான் படத்தின் டெம்போவை அடியோடு குறைப்பது. இடைவேளை வரை இவர்கள் எபிசோடை த்ரில்லர் போல் கொண்டு போய் விட்டு, இரண்டாம் பாதியில் காமெடி கள்ளக்காதல் என்று ஏதோ ஏதோ செய்கிறார்கள். தொழில்முறை கொலைகாரன் போல் இவர்கள் திருட்டு போன்னில் பேசுவது, கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஆனால் போன் தொலைவது திரைகதையின் தேவை. அதை வேறு மாதிரி குடுத்து இருக்கலாம். கள்ளக்காதல் கதையில் சூரி வேறு வருகிறார். மரண மொக்கை. காலாவதியான சின்ன கலைவாணர் விவேக் போல் சத்தம் போட்டு பேசுகிறார். சத்தம் போட்டு பேசுவது எல்லாம் காமெடி இல்ல என்று இவருக்கு யாரவது சொன்னால் தேவலை. குடி குடியை கெடுக்கும் என்கிற மெசேஜில் கொஞ்சம் செண்டிமெண்ட் வேண்டும் என்று 
கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவன் கதாபாத்திரத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.


சும்மாவே தமிழ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கொடி கட்டி பறக்கும். இதில் குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி மெசேஜ் சொல்கிறார்கள். படத்தின் எல்லோரும் எதாவாது சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். டாஸ்மாக் அல்லது சரக்கு இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர் "கோகுல்", ரௌத்திரம் என்கிற அக்ஷன் படத்தை எடுத்தவர். வலுவான திரைக்கதை இல்லாதனால் படம் தோற்றது. இதிலும் வலுவான திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார். இசை ஓகே ரகம் தான். விஜய் சேதுபதி வரும் இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு பிடித்து இருந்தது. 

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - ரொம்ப சுமாரான படம் தான்
My Rating: 6.5/10.
சமிபத்தில் எழுதியது : ராஜா ராணி (2013)