Sunday, December 22, 2013

Dhoom 3 (2013) - ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் !!

இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம்.  ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும். 

இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.


இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.

சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார். 


ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. 

படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை  எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.


ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.

Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!
My Rating: 6.4/10.

சமிபத்தில் எழுதியது: பிரியாணி (2013) 


Friday, December 20, 2013

பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !!

சான்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி இன்று இரவு "பிரியாணி" படத்துக்கு சென்றோம். கார்த்திக்கின் முந்திய படங்களினால் ஏகத்துக்கும் பல்பு வாங்கி இருந்த காரணத்தால் பிரியாணியை ஸ்கிப் செய்து விடலாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். இருந்தாலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தான் படத்துக்கு சென்றோம். கோவா தவிர்த்து வெங்கட்டின் அணைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு வழக்கம் போல் எங்களை ஏமாற்ற வில்லை. பிரியாணியை மிகுந்த சுவையுடன் பரிமாறி, வயறு நிறைய திருப்தியுடன் எங்களை திருப்பி அனுப்பி உள்ளார். வெங்கட் ஸ்டைலில் நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி கிட்டியது.


சுகன் (கார்த்திக்) மற்றும் பிரேம்ஜி சிறு வயது நண்பர்கள். தற்சமயம் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். கார்த்திக்கின் காதலி ஹன்சிகா. வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெரிய பணக்காரர் நாசர். கிரானைட் முறைகேட்டில் சிபிஐ அவரை கைது செய்ய துடிக்கிறது. பிளே பாய் வாழ்க்கையை வாழும் கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஆம்பூரில் தண்ணி பார்ட்டிக்கு போகும் கார்த்திக் பிரேம்ஜி கூட்டணி பிரியாணி சாப்பிட அலைகிறார்கள். பிரியாணி சாப்பிடும் இடத்தில அழகிய (!) பெண் ஒருத்தியை பார்த்து அவள் பின்னால் போகிறர்கள். ரீசர்ட்டுக்கு போகும் அவர்கள் அங்கு குடித்து விட்டு மட்டை ஆகிறார்கள். 

முழித்து பார்க்கும் போது தான் தாங்கள் பெரிய பிரச்சினையில் மாட்டி இருப்பது தெரியவருகிறது. அதுவும் யாரோ இவர்களை ப்ளான் செய்து மாட்டி விட வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன பிரச்சனை, இவர்களை மாட்டி விட நினைப்பது யார், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வெங்கட் பிரபு சரோஜா பாணியில் சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களை கூட இரண்டாம் பாதியில் மையின் சஸ்பென்ஸுடன் முடிச்சு போட்டு மிக அழகாய் அவித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஜாலி பட்டாசு என்றால் இரண்டாம் பாதி நிற்காமல் வெடிக்கும் சரவெடி. 


கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. மிகவும் சீரியஸாக நடித்து இருக்கிறார். பிளே பாய் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி வருகிறார். அக்ஷன் காட்சிகளில் செமையாய் ஸ்கோர் செய்கிறார். பிரேம்ஜியை இவர் கலாய்ச்சு எடுக்கும் காட்சிகள் அனைத்துமே அருமை. ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடி. ஹன்சிகா தனது பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார். ஒரு கவர்ச்சி (!) பாட்டு, ஹீரோ பின்னால் வர ஒரு பாட்டு என்று தன் வேலையை குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார்.

பிரேம்ஜி பற்றி என்ன சொல்ல. அவரிடம் ஆஸ்கார் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்திலே "என்ன கொடுமை சார் இது", அளவுக்கு தான் நடிக்க முடியும் என்று மிக தெரிவாக சொல்லி விட்டார்கள். நீண்ட நாட்கள் கழித்து ராம்கி, நல்ல ரோல். வயது கூடினது போல் தெரியவில்லை. செந்துரபூவே படத்தில் பார்த்தது போலே இருக்கிறார். 90's அக்ஷன் ஹீரோவான் ராம்கிக்கு கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் இன்னும் நல்ல ஸ்கோப் உள்ள அக்ஷன் பிளாக் வைத்து இருக்கலாம். நசார் வழக்கம் போல் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார். உமா ரியாஸ் சப்ரைஸ் பேக்கேஜ். காண்ட்ராக்ட் கில்லர் ரோலில் நன்றாக மிரட்டி உள்ளார். மௌன குரு படத்திருக்கு பிறகு நல்ல ரோல்.


சம்பத் மற்றும் ஜெயப்ரகாஷ் வீணடிக்க பட்டு விட்டார்கள். ஜெயப்ரகாஷ் கதாபாத்திரதால் கதைக்கு பெரிய யூஸ் எதுவும் இல்லை. போலீஸ் கேரக்டர் ஒன்று வேண்டும் என்பதால் அவரை நுழைத்து இருக்கிறார் என்று நினைக்கிறன். முந்திய வெங்கட் படத்தில் வந்த  ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என்று அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்கள். ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி. யார் யாருக்கு என்ன என்ன டயலாக் குடுத்தால் எடுபடும் என்று நன்றாக் தெரிந்து வைத்து இருக்கிறார். அதனால் தான் பிரேம்ஜி போன்ற நடிகர்கள் வைத்து தொடர்ச்சியாய் ஹிட் குடுக்க முடியாது. யுவனின் 100 படம் இது. இசை ஓகே, பின்னணி இசை எனக்கு ஏமாற்றமே. இன்னும் உழைத்து இருக்கலாம் யுவன். வெங்கட்டின் ஆஸ்தான் ஒளிபதிவாளர் சக்தி சரவணன், சேஸ்ஸிங் காட்சிகளில் கேமரா விளையாடி உள்ளது. கெஸ்ட் ரோலில் அஜித் வேறு இருக்கிறார் என்று யாரோ புண்ணியவான் விக்கிபீடியாவில் அப்டேட் செய்து இருந்தார்கள். அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. வெங்கட் பிரபுவின் சரோஜா படம் உங்களுக்கு பிடித்தது என்றால் நீங்கள் தவற விட கூடாத "பிரியாணி".

பிரியாணி - செம டேஸ்ட் மா 
My Rating: 8.0/10.
சமிபத்தில் எழுதியது : இவன் வேற மாதிரி (2013)


Tuesday, December 17, 2013

இவன் வேற மாதிரி (2013) - ஒன்னும் புதுசா இல்ல.

கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.


தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.

எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.


இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார். 

எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.

My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.