Saturday, May 26, 2012

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ரெண்டு வழிகள் உள்ளன, ஒன்று நீங்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் அந்த நாட்டின் திரைப்படங்களை பார்க்கலாம் - யாரோ சொன்னது !!!!!
     
திரைபடங்கள் நமக்கு என்ன வாழ்க்கைமுறையை கற்று தர போகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய படம் "City of God-(2002)" a.k.a: Cidade de Deus. உங்கள் சந்தேகம் போயே போய் விடும். பிரேசில் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புட் பால் விளையாட்டு வீரர்கள், சம்பா நடனம் மற்றும் பெரிய ஜீசஸ் சிலை தான். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை நாம் அறிந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த படம் முலமாக நீங்கள் பிரேசில் நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ள முடியும்.எனக்கு பிரேசில் என்றால் இனி மேல் இந்த படமும் ஞாபகம் வரும்.
City of God பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள ஒரு சேரி பகுதி. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பே இப்படம். அந்த சேரியில் நிறைந்து இருப்பது வன்முறை மற்றும் அதீத வன்முறை மட்டுமே. அது மட்டும் அல்லாது போதை மருந்து கும்பல், அவர்கள் செய்யும் கொலை, கொள்ளை என்று அந்த சேரியே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டு வருகிறது. இந்த மாதிரி அசாதாரணமான சூழ்நிலையில் அந்த சேரியில் பின்புலத்தில் இருந்து வந்து, சிறந்த போட்டோக்ராப்பர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ராக்கெட் (Rocket) என்ற இளைஞன் தனக்கும் City of God-க்கு இருக்கும் பந்தத்தை நமக்கு விவரிக்கும் கதையே இந்த படம். சும்மா சொல்ல கூடாது, இந்த படத்துல யாரும் நடிச்ச மாதிரி எனக்கு தெரியவில்லை, எல்லாம் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள்
படத்தில் முதல் காட்சியில் City of God நகரின் மைய பகுதியில் ஒரு தாதா கேங், தங்கள் மதிய உணவிற்கு சிக்கன் சமைத்து கொண்டு இருப்பார்கள். அங்கு நிற்கும் ஒரு கோழி மரண பயத்துடன் மற்ற கோழிகள் சிக்கன் ஆவதை பார்த்து கொண்டு இருக்கும். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று, தன் கட்டை தானே அவிழ்த்து கொண்டு தப்பித்து ஓடும். நம்ப ஊருல ஹீரோயின் கோழி தப்பிச்சி போச்சுனா அதை பிடிச்சு தர நம்ப ஹீரோ இருப்பாரு. கோழி பிடிக்கிற சாக்குல அவரு ஹீரோயின பிடிப்பாரு !! காதல் வரும், இது சராசரி சினிமா.. ஆனா நம்ப பார்கிறது உலக சினிமா. இங்க தப்பிச்ச கோழிய பிடிக்க அந்த தாதா கும்பலின் மொத்த பேரும் துப்பாக்கிய தூக்கிகிட்டு ஓடுவாங்க. சும்மா கிடையாதுங்க சுட்டுகிட்டே ஓடுவாங்க. எல்லாம் பத்து வயசுல இருந்து இருபது வயசுக்குள்ள தான் அந்த தாதா கேங் ஆளுங்க இருப்பாங்க. ஓடுற கோழி படத்தோட கதைசொல்லி ராக்கெட் பாகத்துல வந்து நிக்கும். அந்த கும்பலின் தலைவன் பேரு லில்' ஜே (Lil' Ze), வெறும் இருபது வயசு தான் இருக்கும். ஜே மற்றும் ராக்கெட் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஜே ராக்கெட்கிட்ட அந்த கோழிய பிடிக்க சொல்லுவாரு. ராக்கெட் கோழி பிடிக்க ரெடி ஆவான். கரெக்டா அந்த நேரம் பார்த்து மொத்த போலீஸ் குரூப் தாதா லில்' ஜே கும்பலை உயிரோடு அல்லது பிணமாக பிடிக்க அன்புச்செல்வன் IPS மாதிரி விறப்பா வந்து சேருவாங்க. இந்த பக்கம் போலீஸ் படை, அந்த பக்கம் லில்' ஜே படை, நடுவுல ராக்கெட் & கோழி. இங்க இருந்து பிளாஷ்பேக்....... ராக்கெட் தன்னோட கடந்த காலத்தை பற்றியும் லில்' ஜேவை பற்றியும் மற்றும் அந்த சேரியில் வாழ்ந்த அனைவரை பற்றியும் நமக்கு கதை சொல்லுவார்.
ROCKET
கதை முதலில் 60's பயணம் செய்யும். இங்கு நாம் City of God-யின் ஆரம்ப நாட்களை பார்போம். ராக்கெட் மற்றும் லில்' ஜே சிறுவனாக இருப்பார்கள். லில்' ஜேவின் மற்றும் ஒரு நண்பனின் பெயர் பென்னி(Benny). அங்கு டெண்டர் ட்ரையோ (Tender Trio) என்ற முன்று பேர் கொண்ட கேங் சிறு, சிறு கொள்ளைகள் செய்து கொண்டு இருப்பார்கள். டெண்டர் ட்ரையோ கேங்கில் எப்படியாவது தங்களையும் சேர்த்து கொள்ள சிறுவர்கள் லில்' ஜே & பென்னி அந்த முன்று பேரை கெஞ்சி கொண்டு இருப்பார்கள். இப்படியாக 60's கதை பயணம் செய்யும். கதை முடிவில் ட்ரையோ கேங் மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
அடுத்து கதை 70's-க்கு நகரும். அங்கு ராக்கெட் பள்ளிக்கு செல்லும் வாலிபனாக வளர்ந்து இருப்பான். லில்' ஜே மற்றும் பென்னி அந்த நகரத்தில் பெரிய போதை மருந்து டீல்ர்ஸ் ஆக வளர்ந்து இருப்பார்கள். தங்கள் பாதையில் யார் வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பிரதான எதிரி கேங் கேரட்(Carrot). பென்னி அனைவரையும் அனுசரித்து செல்லும் பொறுமைசாலி, லில்' ஜே அவனுக்கு நேர் எதிர். பொறுமை என்பதே கிடையாது. அனைவரிடமும் சண்டை போடும் கேரக்டர். ஒரு டான்ஸ் பார்ட்டியில் கேரடின் ஆள் தவறுதலாக லில்' ஜேவை சுடுவதற்கு பதில் பென்னியை சுட்டு கொன்று விடுவான். அதை பார்த்த லில்' ஜே வெறி கொண்டு, தன் நண்பனை கொன்ற கேரட் கேங்யை பழி வாங்க புறப்பட்டு விடுவான். இங்கு இருந்து கேங் வார் ஆரம்பிக்கும். இங்கு இருந்து 80's ஆரம்பிக்கும்.
இந்த கேங் வாரின் இறுதி தான் நாம் பார்த்த முதல் காட்சி.......

Children Shooting
படத்தில் சுவாரிசியங்கள் சில:

  • படம் நான்-லீனியர் பாணியில் சொல்ல பட்டு இருக்கும். ஆனால் நமக்கு குழப்பம் இல்லாமல் திரைக்கதை புரியும்.
  • படத்தில் ராக்கெட் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். ஒரு கதை அல்லது சம்பவம் என்று ராக்கெட் விவரிக்க ஆரம்பித்தால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விடும் கதை. ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தில் வரலாறு, புவியல், மற்றும் பூகோளம் போன்ற அணைத்து விசயங்களும் புட்டு புட்டு வைக்க படும். உ.தா: போதை மருந்து விற்க படும் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையை காட்டி, போன தலைமுறையில் அந்த அறையில் யார் முதலில் தங்கி இருந்தார்கள், அவர்களிடம் இருந்து யார் யாருக்கு அந்த அறை கை மாறியது, தற்பொழுது அந்த அறையில் யார் உள்ளார்கள் என்று அணைத்து விசயங்களும் நமக்கு விளக்க படும்.
  • படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மிகவும் தந்துருபமாக படமாக்க பட்டு இருக்கும். ஒரு காட்சிகளில் 10 வயது சிறுவன் ஒருவனிடம் லில்' ஜே துப்பாக்கியை குடுத்து வேறு ஒரு 8 வயது சிறுவனை கொல்ல சொல்லும் காட்சி நம்மை உலுக்கி விடும்..8 வயது சிறுவனின் கண்ணில் தெரியும் உயிர் பயம் மற்றும் 10 வயது சிறுவன் தான் கொலை செய்ய வேண்டுமா என்று கண்ணில் மிரட்சியும் பயமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் காட்சி....யப்பா....கிரேட் ஆக்டிங் !!!
  • இறுதி காட்சி தான் படத்தின் அடிநாதமே. சினிமா தனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சி அது.
  • இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படம். படம் இறுதியில் நிஜ வாழ்வில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் படங்களை காட்டுவார்கள்.
இந்த படம் கட்டாயம் தவற விட கூடாத படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி.அதீத வன்முறை காரணமாக இப்படம் 15+ வயதினற்கு மட்டுமே உகந்தது

My Rating: 9.2/10 .... Must watch..!