Friday, September 28, 2012

தாண்டவம் (2012)- மிஸ் ஆன ருத்ரதாண்டவம்

கல்லூரி முடித்த பிறகு பல வருடங்கள் கழித்து இன்று தான் ஒரு படத்திருக்கு FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் டாக்டர் சியான் விக்ரம் நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் "தாண்டவம்". படத்திருக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனேன். படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டல் ஓர் அளவு பூர்த்தி செய்தது என்றே சொல்வேன். அது என்ன ஓர் அளவு..?? சில காட்சிகள், சூப்பராகவும், சில காட்சிகள் சுமாரகவும், சில காட்சிகள் மொக்கையகவும் இருந்தன. இதை நல்ல படம் என்று கொண்டாட முடியாது, மொக்கை என்று ஒதுக்கவும் முடியாது. சுமார் லிஸ்டில் சேர்க்கலாம். கதை லண்டனில் ஆரம்பித்து, இந்தியா வந்து, இறுதியில் லண்டனில் முடிகிறது.


போன வாரம் தாண்டவம் படத்தின் மீது "கதை திருட்டு" வழக்கு ஒன்றை ஒரு உதவி இயக்குனர் போட்டதாய் செய்தி படித்தேன். அதனால் படம் வெளி ஆவதில் சிக்கல் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த வழக்கு பற்றிய எந்த ஒரு சுவடும் வெளியில் தெரியாமல், இன்று வெற்றிகரமாக படம் வெளியானதில் எனக்கு பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்த வரை அரசியலில் ஊழலை எப்படி ஒழிக்க முடியாதோ, அதே போல் சினிமாவில் "கதை திருட்டு"/ஹாலிவுட் படத்தின் தழுவல், போன்றவற்றை ஒழிக்கவே முடியாது. எப்படி ஊழலுடன் வாழ பழகி, அதை சர்வசாதாரணமாக எடுத்து கொள்கிறேனோ, அதே போல் தழுவல்களையும் ஈசியாக எடுத்து கொள்ள பழகி விட்டேன். படத்தின் மூலத்தை தேடி அலைந்து எனது நேரத்தை விரயம் செய்யாமல், படம் நன்றாக இருந்தால் ரசிப்பது, மொக்கையாக இருந்தால் மறந்து விடுவது என்று இருக்கிறேன். இப்பொழுது தாண்டவம் படத்தின் கதை சுருக்கத்தை பார்போம்.

படம் லண்டன் நகரில் ஆரம்பிக்கிறது. லண்டன் நகரில் 2011 வருடம் ஜனவரி 1 ஆம் தேதி காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. பல பேர் உயிர் இழக்கிறார்கள். அமெரிக்காவின் செப்டம்பர் -11 போன்ற தாக்குதல் என்று மீடியாக்கள் கூறுகின்றது. குண்டு வெடித்த சரியாய் ஒரு வருடம் கழித்து நகரில் வெவ்வேறு இடங்களில், ஒரே மாதிரி முன்று கொலைகள் நடைபெறுகிறது. கொலைகளை பற்றி துப்பறிய லண்டன் போலீஸ் அதிகாரியாக "வீர கத்தி" என்கிற இலங்கை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நாசர் அறிமுகம் ஆகிறார். ஒரு கட்டத்தில் கொலைகளை செய்வது கண் பார்வை அற்ற "கென்னி" (விக்ரம்) என்று தெரிய வருகிறது. கென்னி தனது நான்காவது கொலையை அரங்கேற்றம் செய்யும் வேலையில், படத்தில் இடைவேளை வேண்டி, போலீஸ் கென்னியை சூழ்ந்து கொள்கிறது. இடைவேளை முடிந்ததும் வழக்கம் போல  கென்னி போலீஸ்ஸிடம் இருந்தது தப்பித்து விடுகிறார். 


பிறகு என்ன பிளாஷ்பேக் தான். பிளாஷ்பேகில் கென்னியின் உண்மையான பெயர் சிவகுமார் என்று நமக்கு தெரிகிறது. இந்தியாவின் ரா அமைப்பின் முக்கிய ஆபிசர்  விக்ரம். அவருக்கும் அனுஷ்காவிற்கும் கிராமத்தில் கல்யாணம் நடக்கிறது. விக்ரம் ஏன் இந்தியாவில் இருந்தது லண்டன் வந்தார்..?? ஏன் பெயரை கென்னி என்று மாற்றி கொள்கிறார் ..?? ஏன் கொலை செய்கிறார்..??அவரது கண் பார்வை எப்படி பறி போனது..?? முதல் காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விக்ரமிருக்கு என்ன சம்பந்தம் ?? குண்டு வைத்து யார்..?? இது போன்ற கேள்விக்கான விடையை அறிய விரும்புவார்கள் "தாண்டவம்" படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக முன்று மாதம் வெயிட் செய்தால் விஜய் டிவியில் படத்தை போடும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Human Echolocation
விக்ரம்- வழக்கம் போல் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை வாரி வழங்கி உள்ளார். ஒரு துளி கூட குறை சொல்ல முடியாத நடிப்பு. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் நடிப்பதில் கமலுக்கு அடுத்து தமிழ் திரையுலகில் விக்ரம் தான் என்று கண்ணை முடி சொல்வேன். பார்வை அற்ற கேரக்டரில் விக்ரம் கன கச்சிதமாய் பொருந்துகிறார். கண் தெரியாமல் மனித எதிரொலி இடமாக்கம் (Human Echolocation)என்கிற டெக்னிக் முலம் எதிராளிகளை அடித்து விழுத்துக்கிறார். கண் பார்வை இல்லாதவர்கள் ஒலி எழுப்பி அதில் வரும் ரெஸ்பான்ஸ் வைத்து எதிரில்  யார் இருக்கிறார்கள், என்ன இருக்கிறது என்று அறிந்து அதன் படி நடப்பது தான்  Echolocation டெக்னிக். விக்ரம் இந்த டெக்னிக் முலம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் நம்பும் படியாக உள்ளன. நிறைய இடங்களில் விக்ரமின் முதுமை, மற்றும் கழுத்தில் சுருக்கம் நன்றாகவே தெரிகிறது. 

அனுஷ்கா- பிளாஷ்பேகில் விக்ரமின் ஜோடியாக வருகிறார். இவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. காட்சிகளும் ரொம்பவே குறைவு தான். இவரும் முத்தின பீஸ் மாதிரி தான் தெரிந்தார். விக்ரம்மிற்கு ஏற்ற ஜோடி. லண்டன் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து உள்ளார். இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது போல, நிறைய காமெடி மொக்கை ரகம், சில "பேஸ் புக்" ஜோக்ஸ் வேறு உபயோகித்து உள்ளார். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் எடுத்தது போல் எனக்கு தெரிந்தது. லண்டன் அழகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சும்மா ஒரு பாடலுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டு உள்ளார். சிறிது நேரம் பார்வை இல்லாத விக்ரமை லவ் செய்கிறார், அவ்வளவே. ஜெகபதி பாபு விக்ரமின் நண்பராக வருகிறார்.


G.V பிரகாஷின் சில பாடல்கள் ஏற்கனவே மதராசபட்டினம் படத்தில் கேட்ட மாதிரி இருந்தது. பின்னணி இசையும் அவ்வளவு ஈர்க்கவில்லை, சுமார் ரகம் தான். 
ஒளிப்பதிவு பல இடங்களில் கண்ணுக்கு குளுர்ச்சி. இயக்குனர் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் குடுக்க வேண்டும் என்று தான் நினைத்து படத்தை எடுத்து உள்ளார். கதையும் அது போல் தான், ஆனால் நிறைய ட்விஸ்ட் என்னால் யூகிக்க முடிந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்.

தாண்டவம்- ருத்ர தாண்டவம் ஆகி இருக்க வேண்டியது, ஆனால் ஜஸ்ட் மிஸ்.


Monday, September 24, 2012

இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள்

முதல் முதலில் சாதனைகள் என்றுமே மகத்தானவை, நினைவை விட்டு அகலாதவை. முதல் முதலில் நிலவில் கால் பதித்த "நீல் ஆம்ஸ்ட்ராங்கை" யாராவது மறக்க முடியுமா ? முதல் முதலில் Mt.எவரெஸ்டில் கொடி நட்டிய  டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரியை அவ்வளவு சீக்கிரம் மறக்க தான் முடியுமா ? அதே போல் நமக்கு தெரியாத பல முதல் சாதனைகள் இந்திய சினிமாவில் நிகழ்த்த பட்டு உள்ளன. நான் மிகவும் நேசிக்கும் இந்திய சினிமாவில் சில முதல் முதலில் சாதனைகளை பார்போம்........

இந்தியாவின் முதல்இயக்குநர்கள்:
ஹீராலால் சென் மற்றும் ஹரிச்சந்திர சக்ராம் படவேத்கர் (சாவே தாதா என்று அறியப்பட்டவர்). இருவரும் புகைப்படக் கலைஞர்கள்.
H.S அவர்களின் முதல் செய்தி படம்
சென், மேடை நாடங்களை 1898 இலிருந்து படமாக்கத் தொடங்கினார். அவர் ராயல் பயாஸ்கோப் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்தான் இந்தியாவின், பார்க்கப் போனால் உலகின் முதல் முழுநீளப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தை 1904 இல் உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. என்றாலும் அந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் தீவிபத்தால் முற்றிலும் அழிந்துபோயின. நவம்பர் 1899 இல் படவேத்கர் பாம்பே தொங்கும் தோட்டத்தில் குத்துச்சண்டை ஒன்றைப் படமாக்கினார். வாட்சன் ஹாஸ்டலில் இந்தியாவின் முதல் திரையிடல் 1896 ஜூலை 7 இல் நடந்தபோது அவர் அங்கு இருந்தார். இந்தியாவின் முதல் செய்திப்படம் என்று கருதப்படும் இங்கிலாந்தி லிருந்து டிசம்பர் 1901 இல் இந்தியா திரும்பும் பாம்பே மாகாண கல்வித்துறை அமைச்சர் ஆர்.பி.பரஞ்சிப்பியின் வருகையையும் 1903 வருடம் கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற கிங் எட்வர்ட் VII அவர்களின் முடிசூட்டு விழாவில் கர்சன் பிரபு என்கிற பிரிட்டிஷ் வைஸ்ராயயை படம் பிடித்தார். 

முதல் திரைப்படத் தயாரிப்பாளர்:
ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தியேட்டர் கலைஞர் தனது எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் வரிசையாக நிறைய குறும்படங்களைத் தயாரித்தார். அதுதான் பின்னாளில் மதன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தோற்றமாக 1918 இல் பரிணமித்தது. கல்கத்தாவில் ஒரு டெண்ட் கொட்டகையில் தனது படங்களை 1902 முதல் மதன் திரையிடத் தொடங்கினார். புதிதாகத் தோன்றி பெரிய அளவில் வளர்ந்து வந்த திரைப்படத் தொழிலின் வளர்ச்சியை உணர்ந்துகொண்ட அவர், தனது கம்பெனியை பரவலாக கொண்டு சென்றார். அது மௌனப் பட சகாப்தத்தில் ஒரு முதன்மையான சக்தியாக இருந்தது. இவர்தான் முதன் முதலில் திரைப்படத் தயாரிப்பு என்பதையும் தாண்டி, விநியோகம் மற்றும் கண்காட்சிக்கு வைத்தல் என்று விரிவுபடுத்தியவர். 
இந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனத்தை அவர் கல்கத்தாவில் நிறுவினார். வங்காளத்தின் முதல் வணிகரீதியான முழுநீள மௌனப்படமான பில்வமங்கள் என்ற படத்தை மதன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அப்படம் 1919 நவம்பர் 11 இல் கார்ன்வாலிஸ் தியேட்டர் என்ற திரையரங்கில் ஓடத் தொடங்கியது.அந்தப் படம் 10 ரீல்களைக் கொண்டது. 

முதல் திரையரங்கம்:
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907 இல்ஜே.எஃப். மதனால் கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கதைப் படம் :
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது.

இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் :
ராஜா ஹரிச்சந்திரா படத்தில் ஒரு காட்சி
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்க படும் "தாதாசாகே பால்கே" அவர்களின் "ராஜா ஹரிச்சந்திரா" (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படம் பம்பாய் கோரனேஷன் சினிமாட்டோகிராஃப்  என்ற  அரங்கில் வெளியானது. இப்படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள், அந்த காலத்தில் சினிமாவில் நடிப்பதருக்கு பெண்கள் முன்வர வில்லை. அதனால பால்கே அவர்கள் ஆண் நடிகர்களை பெண் வேடம் இட்டு, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களையும் படம் ஆக்கினர். படம் மக்களுக்கு காட்ட படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக (21 ஏப்ரல்)  பம்பாயின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் பல செய்தித்தாள்கள் ஆசிரியர்களுக்கு,  பாம்பே ஒலிம்பியா சினிமாவில், இப்படத்தின்  3,700 அடி நீள முன்னோட்டக் காட்சிக்கு தாதா சாஹேப் பால்கே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தியத் திரையில் முதல் பெண்கள்:
துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான மோகினி பஸ்மசூர்(1914) என்ற படத்தில் நடித்தனர்.

முதல் வெற்றித் திரைப்படம் :
பால்கே இயக்கிய லங்கா தகன் (1921) முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம். அது பாம்பே கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. 23 வாரங்கள் ஓடியது.

தடை செய்யப்பட முதல்இந்தியப் படம்:
பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த பகத் விதூர் (1921). ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத்தே அப்படத்தின் பிரதான வேடத்தில் நடித்தார். அதில் அவர் மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தை சென்சார் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.

முதல் திரைப்படத் தணிக்கைக் குழு :
1920 இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 

இந்தியாவின் முதல் திரை நட்சத்திரம் :
பேஷன்ஸ் கூப்பர். அவர் மதன்ஸ் ஆஃப் கல்கத்தா தயாரித்து, ஜ்யோதிஷ் பந்தோபாத்யாய் இயக்கிய நளதமயந்தி (1920) என்ற படத்திலும் ஏராளமான பிற படங்களிலும் நடித்தார்.
முதல் சமூக நையாண்டிப் படம்:
தீரேன் கங்கூலி
பிலேத் பேராட் (இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர், 1921, வங்க மொழிப்படம்). தயாரித்து நடித்தவர் தீரேன் கங்கூலி. இந்தப் படம் காதல் மற்றும் கிழக்கத்திய -மேற்கத்திய முரண்பாடு ஆகியவற்றைக் கையாண்ட சமூகத் திரைப்படங்களுக்கு முன்னோடி. தீரேன் கங்கூலி அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்க படும் மிக உயரிய விருதான "தாதாசாகே பால்கே" விருது மற்றும் "பத்ம பூஷன்" விருது பெற்றார். 
முதல் சரித்திரப் படம்:
சிங்காகாத் 1923,  பாபுராவ் பெயிண்டர் இயக்கியது. இதுதான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இப்படம் சக்கரவர்த்தி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம்:
புல்புல்- எ- பரிஸ்தான்(1926). இயக்குநர்: ஃபாத்மா பேகம்.

நில உரிமை பற்றிய முதல் படம்:
நீரா (1926). இந்தப் படம் ஆர்.எஸ்.சவுத்திரியால் இயக்கப்பட்டது. மெஹபூப் கான் இப்படத்தில் அவரது உதவியாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிலவுரிமைப் பிரச்சனைப் பற்றிய விரிவானப் பார்வையுடன் ரொட்டி (1942)  என்ற படத்தை இயக்கினார்.

முதல் தேவதாஸ் படம் :
நரேஷ் மித்ரா இயக்கி, பானி பர்மா நடித்த தேவதாஸ் (1928). ஒளிப்பதிவு: நிதின் போஸ். அனுராக் காஷ்யப்பின் தேவ் டி உட்பட, இந்தக் கதை மொத்தம் 12 முறை வங்காளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டிருக்கிறது.

முதல் ரவீந்திரநாத் தாகூர் திரைத் தழுவல்:
நாவல் காந்தி இயக்கிய பலிதான் (1927). இப்படம் தாகூர் 1887 இல் எழுதிய நாடகமான பிசர்ஜனை அடிப்படையாகக் கொண்டது. தாகூரே இதை படமாக்க விரும்பி குழந்தை என்ற பெயரில் திரைக்கான எழுத்து வடிவமாக உருவாக்கியிருந்தார். என்றாலும் அது படமாகத் தயாரிக்கப்படவே இல்லை.

முதல் மொகலாய வரலாற்றுப் படம்:
நூர்ஜகான் (1923). இது மதன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பேஷன்ஸ் கூப்பர் நடித்தது. அனார்கலி என்ற உருது நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி தாஜ் இயக்கிய  த லவ்ஸ் ஆஃப் அ மொகல் பிரின்ஸ் (1928) என்ற படம் மற்றொரு மொகலாயர் காலத்து வரலாற்றுப் படமாகும்.

சிவாஜி பற்றிய முதல் முக்கியப் படம்:
உதய் கல்(1930). மராத்திய வரலாற்றில் சிவாஜியை முக்கியமான ஒருவராகக் காட்டுவதற்கு இப்படம் பெருமளவு தாக்கம் தந்தது என்று சாந்தாராமே சொல்கிறார். மற்றொரு மராத்திய சினிமா முன்னோடியான பால்ஜி பெந்தர்கர், சிவாஜி பற்றிய பல படங்களை, சத்திரபதி சிவாஜி (1952) மற்றும் பவன் கிந்த்(1956) போன்ற படங்களைத் தந்தார்.

முதல் முத்த காட்சி
முதல் திரை முத்தம்:
எ த்ரோ ஆப் டைஸ் என்ற படத்தில் நடித்த சாரு ராயும் சீதா தேவியும் முதன்முதலாக திரையில் முத்தமிட்டுக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத்தில் முத்தத்துக்குத் தடை இல்லை. 1933 இல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தியத் திரையின் முதல் கவர்ச்சி நடிகை:
பதிபக்தி (1922) என்ற படத்தில் நடித்த இத்தாலிய நடிகை சினோரின்னா மனெல்லி. தயாரிப்பு மதன் தியேட்டர்ஸ். சினோரின்னா உடல்பாகங்கள் வெளியில் தெரியும் வண்ணம் மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மறுதணிக்கை செய்ய வேண்டி வந்தது. கதாநாயகி பேஷன்ஸ் கூப்பர்.


இந்தியாவின் முதல் பேசும்படம்:
ஆலம் ஆரா
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச்14, 1931 இல் வெளியான, இம்பீரியல் மூவிடோன்சின் ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இப்படம் மதன் தியேட்டர்சின் ஷிரின் ஃபர்ஹாத் என்ற படத்தை திரையில் தோல்வியுறச் செய்தது. ஆலம் ஆராவில் பாடல், நடனம் இசை ஆகியவை இடம்பெற்று இந்தியாவின் முதல் வணிகரீதியான படமாக நிலைத்து விட்டது. ஆலம் ஆரா ஒரு வெற்றி பெற்ற பார்சி நாடகமாகும். அர்தேஷிர் இரானி இதை தழுவி இந்தியாவின் முதல் பேசும் படமாக்கினார். படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களையும் பாடகர்களையும் அவரே தேர்வு செய்தார். பாடல்களுக்கு தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன. ஆலம் ஆரா இந்தியாவின் முதல் திரையசைப் பாடல்களை அளித்தது என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.தேதே குதா கே நாம் பர் பியாரே, தாக்கத் ஹை கர் தேனே கி என்ற பாடலின் மூலம் இந்திய சினிமாவின் முதல் பாடகரானார் டபிள்யூ.எம்.கான். படத்தின் முதல் இசைத்தட்டு 1934 இல் தான் வெளிவந்தது. 


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில பேசும் படம்: கர்மா(1933). இயக்கம்: ஹிமான்ஷு ராய். லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் பெவிலியனில் திரையிடப்பட்ட இப்படம் ஆங்கில பத்திரிகைகளால் வெகுவாகப் புகழப்பட்டது. ஒரு நாளிதழ் எழுதியது: "தேவிகா ராணி பேசும் ஆங்கிலத்தைக் கேளுங்கள், இத்தனை அழகான உச்சரிப்பை நீங்கள் கேட்டிருக்கமுடியாது.’’

இந்தியத் திரையில் முதல் ஆங்கிலப் பாடல்:
"Now the Moon Her light Has Shed" என்று தேவிகா ராணி கர்மா (1933) படத்துக்காகப் பாடிய பாடல். இசை அமைத்தவர் எர்னெஸ்ட் ப்ராதர்ஸ்ட்.

முதல் தமிழ் பேசும்படம்: 

 ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய காளிதாஸ். 1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளியிடப்பட்டது. வசனம் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் அமைந்தன.வணிக ரீதியாக இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.Rs.8000 பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட  படம்,  Rs.75000 மேல் வசூலில் தாண்டியது. பட சுருள் சென்னை கொண்டுவரப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, நறுமணப்பத்தி ஏற்றி பட சுருளை வழிபட்டனர். இப்படத்தில் தான் "சினிமா ராணி" என்று அழைக்கப்படும்  T. P. ராஜலக்ஷ்மி அறிமுகம் ஆனார், இவர் தான் பிற்காலத்தில் முதல் தமிழ் பெண் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.
முதல் மலையாள பேசும்படம்எஸ்.நோதானி இயக்கிய பாலன்(1938).
முதல் கன்னட பேசும்படம்: பக்த துருவா (1934), எனினும் சதி சுலோச்சனாதான் முதலில் வெளியானது.

முதல் தெலுங்கு பேசும்படம்: ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய, பக்த பிரகலாத்(1931).


முதல் மலையாள முழுநீளத் திரைப்படம்:  
ஜே .சி.டேனியல் இயக்கிய, விகதகுமாரன்(1928).

முதல் மராத்தி மொழி பேசும்படம்: அயோதியாச்சே ராஜா (1932), வி.சாந்தாராம் இயக்கியது.

முதல் வங்காள மொழி பேசும் படம்:
அமர் சவுத்ரி இயக்கிய, ஜமாய் சாஷ்தி(1931). இப்படம் ஆலம் ஆரா வெளியாகி ஒரு மாதத்துக்குப் பின் ஏப்ரல் 11, 1931 இல் வெளியானது.

 முதல் அஸ்ஸாமியத் திரைப்படம்:
ஜாய்மதி (1935), ஜோதிப்ரசாத் அகர்வாலா இயக்கியது.

ஹாலிவுட் தாக்கத்தில் உருவான முதல் இந்தியப் படம்:
இந்திராமா (1934). கிளாரன்ஸ் பிரவுன்'ஸ் ஃப்ரீ சோல் (1931) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல். அந்த காலத்திலே தழுவல்களை ஆரம்பித்து விட்டார்கள்.

முதல் வண்ணப்படம்:
கிசான் கன்யா
கிசான் கன்யா(1936), ஆதர்ஷ் இரானியின் இம்ப்பீரியல் மூவிடோன் தயாரிப்பில், மோடி கிட்வானி இயக்கியது. சாடட் ஹசன மண்டோ அவர்களின் நாவலை தழுவி எடுக்க பட்ட படம் தான் கிசான் கன். . வி சாந்தாராம் அவர்களின் சைரந்த்ரி (1933) என்கிற மராத்தி மொழி திரைபடத்தில் சில வண்ண காட்சிகள் இடம் பெற்றன, ஆனால் சைரந்த்ரி படதில் இடம் பெற்ற வண்ண காட்சிகளை ஜெர்மனியில் உருவாகினார்கள். ஆனால் கிசான் கன் திரைபடத்தில் இடம் பெற்ற வண்ண காட்சிகள் இந்தியாவிலே தயார் செய்யப்பட்டன. அதனால தான் முதல் இந்திய வண்ண படம் என்ற பெருமையை கிசான் கன் பெற்றது.
முதல் பின்னணிப் பாடல்: மேஸ்ட்ரோ ராய் சந்த் போரல், தூப் சாவோன் (1935)  என்ற படத்தில் முதன்முதலாக பின்னணிப் பாடும் முறையை அறிமுகப் படுத்தினார். " மே குஷ் ஹோனா சாஹூ" என்ற அந்தப் பாடலை பாருல் கோஷ் மற்றும் சர்கார் ஹரிமதியுடன் பெண்கள் குழுவினர் பாடியிருந்தனர்.
இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் மெட்ராஸ் தயாரிப்பு :
எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா (1948).

கேன்ஸ் விருதை வென்ற முதல் இந்தியப் படம்:
நீச்சா நகர் (1946). இயக்கம்: சேத்தன் ஆனந்த். இப்படம் சமூக உண்மை நிலையினை மிக அழகாக படம் பிடித்து காட்டியது. சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் இடையே இருக்கும் இடைவெளியை பற்றி பேசும் படம் இது. இப்படம் 1946 ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச  கேன்ஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படத்திருக்கான" விருதை தட்டி சென்றது.
1954 இல் பிமல் ராயின் "தோ பீகா ஜமீனுக்கு" கேன்சின் சிறப்புப் பரிசு கிட்டியது. 

ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் படம்:
மெஹபூப் கான் இயக்கிய, மதர் இந்தியா (1957).


ரித்விக் கட்டக்கின் அறிமுகம்:
நாகரிக்(1952). தனிச்சிறப்பு கொண்ட திரைக் கலைஞ ரான ரித்விக் கட்டக், ரசிகர் கள் மற்றும் தயாரிப்பாளர் களால் தன் வாழ்நாள் முழுதும் அவதிக் குள்ளானவர். இதனால் அவரது படைப்புகள் பல முழுமை பெறாமலேயே போயின. என்றாலும் தனது 20  வருட திரைப்பயணத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்ததோடு திரையுலகை ஆட்சி செய்த வணிகப்படங்களுக்கு ஒரு சரியான மாற்றாகவும்  விளங்கினார் அவர். இந்திய சினிமா பிதாமகர்களின் வரிசையில் அவருக்கென்று தனித்த , நிலையான இடம் உண்டு.
சிவாஜி கணேசனின் அறிமுகம்: 
பராசக்தி (1952),இப்படத்துக்கு வசனங்கள்  மு.கருணாநிதி எழுதினார்.இதில் சிவாஜி பேசிய வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றன.

சத்யஜித் ரே அறிமுகம்:
பதேர் பாஞ்சாலி (1955),உலக சினிமா வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்தது இப்படம். எந்த முறையில் பட்டியலிட்டாலும் உலகின் சிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவராக தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருபவர் ரே. சினிமா ஊடகத்தின் உண்மையான ஆசானான சத்யஜித் ரே, பலகலைகளில் தேர்ந்த படைப்பாளியாவார். அவர் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் உரிய அங்கீகாரம் தேடித் தந்தார்.

வணிக ஹிந்தி சினிமாவை மாற்றியமைத்த மூவர் குழுவின் எழுச்சி:
ராஜ்கபூர், திலீப்குமார் மற்றும் தேவ் ஆனந்த். இன்குலாபில் (1935)  அறிமுகமானபோது ராஜ்கபூருக்கு வயது 11. நீல்கமலில் (1947) மது பாலாவுக்கு ஜோடியாக கதாநாயகன் வேடத்தில் அவர் நடித்தார். 1948 இல் ஆர்.கே. பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதே ஆண்டில் ஆக் என்ற படத்தை இயக்க வும் செய்தார். திலீப்குமார்,  ஜ்வர் பாதா(1944)  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தேவதாஸ்(1955) மற்றும் மொகலே ஆசாம் (1960) உள்ளிட்ட முத்திரை பதித்த படங்களில் நடித்தார். பிரபாத் தயாரித்த ஹம் ஏக் ஹைன் (1946)  என்ற படத்தின் மூலம் தேவ் ஆனந்த் அறிமுகமானார். 

ரஜினிகாந்த் என்ற அற்புதம்: கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) என்ற படத்தில் அறிமுகமானார். கமல்ஹாசன் கதாநாயக னாக நடித்த அப்படத்தில் ஒரு சிறிய வேடம். கமல் நடித்த மற்றொரு படமான மூன்று முடிச்சில் (1976) முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார். பிறகு அவருக்கு இன்று வரை வெற்றிமுகம்தான்.

ராஜேஷ் கன்னா யுகம்:
அவரது முதல் படம் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஆக்ரி காத்(1966). முக்கிய வேடத்தில் அவர் நடித்த ராஸ் அவரது முதல் வெற்றிப் படம். ஆராதனா (1969) இந்த மெகா ஸ்டாரை உருவாக்கிய படம்.

அமிதாப் எழுச்சி:
கனத்த குரல் கொண்ட அமிதாபுக்கு மிருணாள் சென்னின் புவன் ஷோம் (1969) என்ற படத்தில் வர்ணனையாளராக முதல் வாய்ப்புக் கிடைத்தது. அவரது திரையில் தோன்றி நடித்த முதல் படம் கே.ஏ.அப்பாசின் சாத் ஹிந்துஸ்தானி. கோபக்கார இளைஞன் என்ற தோற்றம்  ஜஞ்சீர் (1973) மூலமே அவருக்குக் கிடைத்தது. 
கமல்ஹாசனின் முதல் படம்:

ஏ.பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மாவில் (1959) ஒரு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் (1975) தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் இளைஞனாக நடித்ததன்  மூலம் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்த கமல்ஹாசன், சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு (2010) வரை தனது திரைப்பயணம் முழுதும் பரிசோதனைகள் செய்துவருகிறார். தனது உள்ளார்ந்த நடிப்புத் திறன் மூலம்,  பிம்ப முத்திரைகளுக்குள் விழுந்து விடும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் எந்த பிம்பத்துக்கும் சிக்காமல் அவர் தனித்து விளங்குகிறார். பலதுறை வித்தகரான கமல் தான் இயக்கம் நான்காவது படமான விஸ்வரூபத்தை முடித்து விட்டார்.


இன்னும் சில தகவல்கள்

மெர்ச்சன்ட்- ஐவரி படங்களின் தொடக்கம்:
1961. இந்தியாவில் பிறந்த இஸ்மாயில் மெர்ச்சன்ட் சிறந்த தயாரிப்பாளருக்கான ஆஸ்கார் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்  பட்டவர்(எ ரூம் வித் எ வியூ, 1986; ஹோவர்ட்ஸ் எண்ட், 1992; ரிமைன்ஸ் ஆஃப் த டே,1993).


ஹிந்தியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம்:
ஜுராசிக் பார்க், 1993.

இந்தியாவின் முதல் மல்டிப்ளெக்ஸ்:
பி.வி.ஆர் அனுபம்(1997).

சலீம் -ஜாவேத்தின் முதல் திரைக்கதை:
சீதா அவுர் கீதா (1972).

காப்பீடு செய்யப்பட முதல் படம்:
சுபாஷ் கையின் தால்(1999)

முதல் திகில் படம்:
ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972).

நவீன சினிமா தொடக்கம்:
மிருணாள் சென்னின் புவன் ஷோம் மற்றும் மணி கவுலின் உஸ்கி ரொட்டி (1969) ஆகிய படங்கள் வருகை

தேசிய விருதுகள் உருவாக்கப்பட்ட ஆண்டு:
1954.  

தகவல்கள் உதவி: சண்டே இந்தியன், விக்கிபீடியா.Friday, September 21, 2012

The Saboteur- (2009) புரட்சிக்காரன் ஆவது எப்படி.. ??-17+

இரண்டாம் உலக போரை மையபடுத்தி எத்தனையோ வீடியோ கேம்ஸ் வந்து இருந்தாலும், "The Saboteur" அளவுக்கு எந்த கேமும் என்னை கவர்ந்தது இல்லை. Saboteur என்றால் "நாச வேலை செய்பவர்" என்று பொருள், நாம் அதை புரட்சிக்காரன் அல்லது கலகக்காரன் என்று வைத்து கொள்வோம். கேம் பற்றி பார்க்கும் முன்பு இணையத்தில் உலாவும் சில வகையான புரட்சியாளர்களை பற்றி பார்போம். புரட்சியாளர்களில் பல வகைகள் உண்டு. முதலில் இணையத்தில் உலாவும் வீக் எண்ட் புரட்சியாளர்கள் பற்றி பார்போம். இவர்கள் வாரம் ஐந்து நாளும் அமைதியாக இருந்து விட்டு சனி மற்றும் ஞாயற்று கிழமைகளில் மட்டும் புரட்சி செய்வார்கள்.இவர்கள் 90% பேர் உழலை ஒழிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அடுத்த குரூப், 24 மணி நேரமும் இணையத்தில் இருந்து கொண்டு, ஏதாவது பேக் பெயரில் ********* போராளி குழு பக்கம் என்று ஒன்றை பேஸ் புக்கில் ஆரம்பித்து, அடுத்த நாட்டுக்கு விடுதலை வாங்கியே தருவேன் என்று அடம் பிடிப்பார்கள். இவர்கள் பண்ணும் அலப்பறைகள் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. அடுத்து சே குவாரா அல்லது பிரபாகரன் போட்டோவை ப்ரோபைல் போட்டோவாக வைத்து கொண்டு இந்தியாவை ஆளும் மத்திய அரசு, மாநில அரசு மட்டுமல்லாது அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சி வரை திட்டி தீர்க்கும் புரட்சியாளர்கள், ஏன்யா கண்டபடி எல்லாரையும் திட்டுறே என்று கேட்டல், நீங்கள தொலைந்தீர்கள், உங்களுக்கு வசைவு விழும். வினவு குரூப்பை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

இன்னும் சில போராளிகள் இருக்கிறார்கள். உலக மேப்பில் பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற நாடு எங்கிருக்கு என்று கூட தெரியாமல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே சொம்பு, ஆலமரம் இல்லாமல் பஞ்சாயத்து செய்யும் புரட்சியாளர்கள். இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஏதாவது புரட்சி செய்ய வேண்டும், அந்நிய சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தை மீட்டக வேண்டும் என்கிற வெறி வந்தது. எனது புரட்சி வெறியை  The Saboteur என்கிற கேம் தீர்த்து வைத்து. இந்த கேம்மில் நீங்கள் விடுதலை வாங்கி குடுக்க வேண்டிய நகரம் "பாரிஸ்". இரண்டாம் உலக போரின் ஆரம்பத்தில் ஜெர்மன் நாஜிகளின் பிடியில் அடைபட்டு கிடக்கும் பாரிஸ் நகரத்தை நீங்கள் புரட்சிபடையுடன் சேர்ந்து மீட்பது தான் கேம். 90% வீடியோ கேம்மில் இருப்பது போல் இதிலும் ஹிட்லரின் நாஜிகள் தான் வில்லன்கள். வழக்கம் போல் அணைத்து நாஜிகளை ஒழித்து நீங்கள் வெற்றி கொடியை நாட்ட வேண்டும். 

கேம் ப்ளாட்:
கதை ஜெர்மன் ஆக்கிரமிப்பு பிரான்சில் நடைபெறும். நீங்க இதில் விளையாட போகும் கதாபாத்திரத்தின் பெயர் சீன் டெவ்லின் (Sean Devlin ). அடிப்படையில் டெவ்லின் எதற்கும் அதிகம் அலட்டிகொள்ளாத, குடியை விரும்பும் ரேஸ் கார் மெக்கானிக். டெவ்லின் ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர். இரண்டாம் உலக போரின் கலந்து கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது நடக்கும் "கிராண்ட் பிரிக்ஸ்" கார் பந்தயத்தில் கலந்து கொள்வார். அப்படி ஒரு முறை சார்ப்ருக்கேன் (Saarbrücken) நகரத்தில் நடக்கும் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். அதே பந்தயத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த நாஜி கர்னல் கர்ட் டீர்கர் கூட (Kurt Dierker) கலந்து கொள்கிறான்.அனைவரும் நாஜி கர்னல் தான் கார் பந்தையத்தில் ஜெயிப்பார் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, புயலாக புகுந்து சீன் டெவ்லின் கார் பந்தயத்தில் நாஜி கர்னலை ஓவர் டேக் செய்து ஜெயிக்கும் நிலைக்கு வந்து விடுகிறான். கோபம் கொண்ட கர்னல் பந்தயத்தின் போது டெவ்லின் காரை சுட்டு சேத படுத்தி விடுகிறான். பிறகு கர்னல் பந்தயத்தில் ஜெயித்தும் விடுகிறான்.
தன்னை ஏமாற்றி வெற்றி கொண்ட கர்னலை பழி வாங்கும் பொருட்டு டெவ்லின் மற்றும் அவனது நண்பன் ஜூல்ஸ் இருவரும் சேர்ந்து, கர்னல் பரிசாக பெற்ற காரை திருடி மலையில் இருந்தது உருட்டி வெடிக்க செய்து விடுகிறார்கள். அதன் பிறகு இருவரையும் கைது செய்யும் கர்னல், அதில்  ஜூல்ஸ்சை சித்ரவதை செய்து கொன்று விடுகிறான். நாஜிகளிடம் இருந்தது தப்பிக்கும் டெவ்லின், பாரிஸ் நகரத்திருக்கு சென்று அங்கு ஏற்கனவே நாஜிகளை எதிர்த்து போராடி வரும் பிரஞ்சு புரட்சி படையினர் உடன் சேர்ந்து நாசிகளுக்கு எதிராக நிறைய நாச வேலைகள் செய்து, மெல்ல நாஜிகள் பிடியில் இருந்தது பாரிஸ் நகரத்தை மீட்டு இறுதியில் மெயின் வில்லன் கர்ட் டீர்கரை கொன்று தன் நண்பனின் கொலைக்கு பழி வாங்குவது உடன் கேம் நிறைவு பெறுகிறது.

கேம் ப்ளே: 
The Saboteur அற்புதமான் கேம் ப்ளே அனுபவத்தை குடுக்கும். கதை 1940 நடப்பதால், கேம் கிராபிக்ஸ் கூட அந்த காலத்திற்கு ஏற்றார் போல் செய்து இருப்பார்கள். பாரிஸ் நகரம், மற்றும் அதன் வீடுகள், கார்கள், என்று அனைத்துமே நமக்கு பழைய காலத்தை ஞாபக படுத்தும். GTA போல் இதுவும் ஓபன் வேர்ல்ட் ப்ரீ ரோம் (Free Roam) கேம். நகரத்தில் உலா வரும் பொழுது நமக்கு பிடித்த காரை நிறுத்தி, அதில் ஏறி கொள்ளலாம். அதே காரை கொண்டு நமக்கு வேண்டிய இடத்திருக்கு செல்லலாம். பாரிஸ் நகரத்தில் நாஜிக்களின் ஆதிக்கத்தின் இருக்கும் பகுதிகள் கருப்பு- வெள்ளை  கலரில் இருக்கும். அங்கு நாம் மிகவும் ஜாக்கிரதையாக நடமாட வேண்டும். நாஜிகளுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும் நாம் காலி. அந்த பகுதிகளில் டெவ்லின் புரட்சி செய்து, அங்கு உள்ள நாஜிகளை விரட்டி அடித்தவுடன் அதே பகுதி கலராக மாறி விடும். அதற்கு அந்த பகுதியில் உள்ள இராணுவ தளங்களை அழிக்க வேண்டும். அதை பல்வேறு மிஷன் முலம் செய்ய வேண்டும். வண்ண பகுதிகளில் நாஜிகளின் கெடுபிடிகள் அதிகம் இருக்காது. அங்கு நாம் தைரியமாக  நடமாடலாம். 

கேம் முழுவதும், டெவ்லின் கதாபாத்திரத்தை "சலுகைகளை"(Perk) வடிவில்  மேம்படுத்த முடியும். Perk ஒவ்வொரு மிஷன் முடிக்கும் போது நமக்கு குடுக்க படும்.  இதன் முலம் டெவ்லினின் ammo, குறி பார்த்து சுடும் திறன், கட்டிடங்களில் வேகமாக ஏறும் திறன் போன்றவற்றை மேம்படுத்தி கொள்ளலாம். மிகவும் இக்கட்டான் நிலையில் நாஜி வீரரை கொன்று அவரது சீருடையை நாம் போட்டு கொண்டு இரகசியமான அந்த இடத்தை விட்டு தப்பித்து போய் விடலாம். நாஜிகள் போல் மாறுவேடம் போட்டு நாம் தப்பிக்கும் இடங்கள் மிகவும் சுவாரிசியமாக இருக்கும். இறுதியாக பாரிஸ் நகரத்தில் உள்ள அணைத்து பகுதிகளை வண்ண மயமாக மாற்றி, பாரிஸ்க்கு விடுதலை வாங்கி குடுத்த பிறகு, மெயின் வில்லன் கர்னல் கர்ட் டீர்கரை நிறைய போராட்டத்திற்க்கு பிறகு இறுதி அத்தியாத்தில் கொல்ல வேண்டியது வரும். 

இந்த கேம்மை உருவாக்கியவர்கள் பான்டமிக் ஸ்டுடியோஸ் (Pandemic Studios), இவர்கள் உருவாக்கிய கடைசி கேம் இது தான், அதன் பிறகு இவர்கள் கடையை முடி விட்டார்கள். கேம்மை வெளியிட்டவர்கள் Electronic Arts. சரியான மார்க்கெட்டிங் இல்லாதனால் கேம் நிறைய மக்களை சென்றடைய வில்லை. ஆனால் Saboteur அற்புதமான வீடியோ கேம். GTA பாணியில் புரட்சி செய்ய விரும்புவோர்கள்,ஆக்சன் பிரியர்கள் தவற விட கூடாத கேம்.

கேமில் சில இடங்களில் நிர்வான காட்சிகள் இடம் பெறுவதால் இதற்க்கு ESRB ரேட்டிங்  M (Mature 17+) குடுத்து உள்ளது.
My Rating: 8.5/10


Tuesday, September 11, 2012

என் விகடன் வலையோசை பகுதியில் "சினிமா சினிமா"

என் விகடன் "மதுரை" ஆன்லைன் பதிப்பில் என்னுடைய ப்ளாக் இந்த வாரம் அறிமுக படுத்த பட்டு உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கு காணலாம். சும்மா படங்களை மட்டும் குடுக்க வேண்டாமே என்று என்னை பற்றிய சிறு பிளாஷ்பேக் உடன் இந்த பதிவை தொடங்குகிறேன்.

5 வருடங்கள் முன்பு Memento கதையை புரிந்து கொள்ள கூகிள்லில் "Memento விமர்சனம்" என்று தேடிய பொழுது தான் தமிழ் ப்ளாக் பற்றி எனக்கு தெரிய வந்தது. அதில் நிறைய மக்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்று எனக்கு தெரிந்தது. தேடுதல் முடிவில் நிறைய சினிமா சம்பந்த பட்ட வலைப்பூக்களை காண நேர்ந்தது. அந்த வலைப்பூக்களை புக்மார்க் செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அதை படித்து வந்தேன். விமர்சனம் நல்லா இருக்கும் படங்களை வீக் எண்டு நாட்களில் டவுன்லோட் செய்து பார்க்கவும் செய்தேன். பல வலைப்பூக்களை படித்து வந்தாலும் ஒரே ஒருவருக்கு மட்டும் பின்னுட்டம் இட்டேன், என்னுடைய முதல் பின்னுட்டம் காண இங்கே செல்லவும். கிட்ட தட்ட 5 வருடங்கள் வலைப்பூ வாசிப்பு அனுபவத்தை வைத்து சென்ற வருடம் நாமும்  வலைப்பூ ஒன்றை ஆரம்பிப்போம் என்று நான் உருவாக்கியது தான் இந்த ப்ளாக். 

பள்ளி நாட்களில் நான் தமிழ் மொழி படித்ததே கிடையாது. மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை என்னுடைய செகண்ட் லாங்குவேஜ் ஹிந்தி, அப்புறம் 11, 12 ஆம் வகுப்பில் பிரெஞ்சு ஆக இருந்தது. தமிழை ராணி காமிக்ஸ், குமுதம், ஆனந்த விகடன், ராஜேஷ்குமார் நாவல் முலமே கற்று கொண்டேன். இப்படி பட்ட தமிழ் அறிவு கொண்ட நான் தமிழில் கதை, கவிதை, கட்டுரை எழுதி குத்துயிர் கொலையுயிர் ஆக இருக்கும் தமிழை இன்னும் கொலை செய்ய வேண்டாம் என்று, தமிழ் இலக்கணம் அதிகம் தேவை படாத சினிமாவை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்து சினிமாவை தேர்ந்தெடுத்து எழுதி வருகிறேன். சினிமா, வீடியோ கேம்ஸ் என்று இருந்த நான் இடையில் பாதை மாறி செல்வது போல் நான் உணர்கிறேன். மீண்டும் சினிமா பதிவுகளை எழுத என் விகடன் ஊக்கம் அளித்து உள்ளது.

விகடனில் தமிழ் வலைப்பூக்களை "என் விகடனில்" அறிமுக படுத்த ஆரம்பித்த உடன் அவர்களுக்கு எழுதி போடலாம் என்று எண்ணினால், ஏதோ ஒன்று என்னை தடுத்து. நாம் அந்த அளவு வொர்த் ஆக எழுதிவிட்டோமோ என்று. சரி இன்னும் கொஞ்சம் நன்றாக் எழுதி தன்னம்பிக்கையை கூடிய பிறகு எழுதி போடலாம் என்று இருந்தேன். கடைசியில் "என் விகடன்" புக்கை நிறுத்தும் அளவுக்கு போய் விட்டார்கள், சரி இன்னும் தாமதிக்க வேண்டாம் என்று போன வாரம் எழுதி போட்டேன். இந்த வாரம் வெளியிட்டு விட்டார்கள்.
விகடன்  படித்து தமிழ் கற்று கொண்ட எனக்கு விகடனில் எனது வலைப்பூ பற்றிய அறிமுகம் வந்தது அளவில்லா மகிழ்ச்சி...! இதில் ஆஸ்கார் தமிழன் தவிர அணைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்தது தான் பெற பட்டது.