Wednesday, February 27, 2013

Amour (2012) - காதலை சொல்லும் உலக சினிமா

Amour (2012) - இந்த வருடத்தின் ஆஸ்கார் வருது வழங்கும் விழாவில் பிற மொழி படங்களுக்கான பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட படம். விருது அறிவிக்கப்பட்டவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரம் பார்த்து முடித்தேன். உலக சினிமா என்றால் என்னவென்று அறிய விரும்புவர்கள் இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். படத்தை பற்றி விகடன் தளத்தில் அற்புதமாய் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.
'அமோர்' என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு காதல் (LOVE) என்று அர்த்தம். மரத்தைச் சுற்றியோ, அல்லது பனிபடர்ந்த மலை உச்சியிலோ ஆடிப்பாடும் காதலர்களை முக்கிய பாத்திரமாகக் கொண்ட வழக்கமான காதல் படம் இல்லை இது. ஒரு வீட்டினுள் அடைந்து கிடக்கிற 80 வயது முதிய தம்பதியினரின் காதலை பார்வையாளன் கண்ணில் நீர் வரவரச் சொல்லியிருக்கிற படம்தான் இந்த அமோர்.


ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ காதல்களைக் கடந்து செல்கிறான். சிறு வயதில் தன் உலகமாயிருக்கும் தாயின் மீது தோன்றும் காதல், கண்டிப்பானவர் என்கிற வெறுப்பினூடேயும் தன் தந்தையின் மீதுள்ள காதல், பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் சக மாணவியின் மீது வரும் காதல், இளம் பருவத்தில் கண்ணில் படும் அழகழகான பெண்கள் அத்தனை பேர் மீதும் பார்த்ததும் அரும்பும் காதல், திருமணத்திற்குப் பின் நம் அனைத்து கனவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு வந்து வாய்த்திருப்பவள் மீது வேறு வழியின்றி முகிழ்க்கும் காதல், பிறகு பிள்ளைகள் மீதும் அப்புறம் அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும். இப்படி காதல் நம் வாழ்வின் ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.

தற்காலத்தில் முகம் பார்க்கா இணையதள சாட் காதல், ஃபோட்டோ பார்த்தே வரும் முகநூல் காதல் என்று உலகமயமாக்கலுக்கு ஏற்ப காதலும் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. நம் வாழ்வின் சம அங்கமான ஒருவர் மரணப்படுக்கையில் தன் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, அவர்மீது நாம் காட்டும் அளவற்ற கருணையும், அக்கறையும் காதல் என்கிற வார்த்தைக்கு இன்னும் அழகையும் இளமையும் சேர்த்துவிடுகிற அற்புதத்தை Michael Haneke-வின் 'அமோர்' சாதித்திருக்கிறது.

சமகால முக்கிய திரைப்பட இயக்குனர்களில் Michael Haneke-வின் இடம் தனித்துவமானது. இன்றுவரை இருண்ட மற்றும் மனதைப் பிசையக்கூடிய கதை சொல்லலுக்குப் பெயர் போனவர் இவர்.'The Seventh Continent’ 1989ல் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். 2001ல் வெளியான இவருடைய 'The piano Teacher’உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். தன்னைவிட வயதில் குறைந்த தனது மாணவன் மீது ஒரு பியானோ டீச்சர் கொண்ட காதலையும் அதன் வலியையும் பதிவு செய்த அப்படம், அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிராண்ட் விருதைப் பெற்றது. தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற படமான 'Blue’ வில் நாயகியாக நடித்த Juliet Binoche-வை வைத்து இவர் இயக்கிய படம் 'Cache' கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று தந்தது. 

2009ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'The White Ribbon'. முதலாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் கதை நிகழ்கிறது. ஒரு ஜெர்மனி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்களும், அக்கிராமத்தில் ஒழுக்கத்தின் பேரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் சிறுவர்களும் என இருவேறு தளங்களில் கதை நகர்கிறது. அக்கிராமத்தின் ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுகளாய் பயணிக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படம் அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க பனைமர விருதைப் பெற்றது.


இந்த வருடம் 'அமோர்' திரைப்பபடத்திற்காக இவ்விருதை ஹனக்கே மீண்டும் பெற்றிருப்பன் மூலம் இவ்விருதை மும்முறை வென்ற பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் Michael Haneke .

பாரிஸில் நிகழ்கிறது இக்கதை. ஒரு வீடு தாழிடப்பட்டிருக்க வெளியிலிருந்து அதை உடைக்கும் சத்தம் கேட்கிறது. சிறிது போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட தீயணைப்ப்பு வீரர்கள் "யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி தேடுகிறார்கள். முடிவில் டேப்பினால் அடைக்கப்ப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறக்க அதனுள்ளே மலர்கள் தூவிய படுக்கையில் ஆனா ( Anna )படுத்துக் கொண்டிருக்கிறாள் பிணமாக.

ஆனாவின் கணவர் ஜார்ஜ். இருவரும் எண்பதுகளில் இருக்கும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்கள். தங்கள் முன்னாள் மாணவன் ஒருவனின் இசை நிகழ்ச்சியை ரசித்துப் பாராட்டிவிட்டு வீடு திரும்புகின்றனர். அடுத்த நாள் காலை இருவரும் உணவருந்தும்போது ஆனா செயலற்று சிலை போலாகி விடுகிறாள். முதலில் ஜார்ஜ் ஆனா விளையாடுவதாகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால் பிறகுதான் அவருக்கு விபரீதம் உறைக்கிறது. உடனடியாக ஆனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் ஆனாவுக்கு இதய அடைப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவளுக்குச் செய்யப்படும் சிகிச்சை தவறாக முடிய, பக்கவாதம் ஏற்பட்டு உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறாள் ஆனா.

ஒரு வீல்சேரில் அடைக்கலமாகிறாள் ஆனா. அவளுக்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்கிறார் ஜார்ஜ். கீழ் வீட்டினரும் அவருக்கு பல உதவிகள் செய்கின்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் ஆனா தன்னை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாதென ஜார்ஜிடம் வேண்டிக்கொள்ள அதற்கு அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. சிறு அசைவிற்கும் தன் கணவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஆனாவுக்கு. ஜார்ஜ் மனம் கோணாமல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஆனாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். நோய் தீவிரமடைய ஆனாவின் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆனா தன் மீதே வெறுப்பு கொண்டு பல நேரம் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்.

ஆனாவின் மகள் தன் தாய் கஷ்டப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் ஆனாவை ஓய்வு இல்லமொன்றில் சேர்த்து விடலாம் என்று யோசனை சொல்ல ஜார்ஜ் அதைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். 'இத்தனை ஆண்டுக்காலம் என்னை அன்போடு பராமரித்தவள் அவள். அவளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்'. என்கிறார்.


ஆனாவைக் கவனித்துகொள்ள இரண்டு வேலையாட்களை நியமிக்கிறார் ஜர்ர்ஜ். ஆனாவுக்கு அதிலே இஷ்டமில்லை. ஒருநாள் அவர்களின் முன்னாள் மாணவன் அவர்களைக் காண வருகிறான். ஜார்ஜ் ஆனாவை வீல் சேரில் வைத்து அழைத்தது வருகிறார். ஆனாவின் நிலை கண்டு மனம் வருந்துகிறான் வந்தவன். ஆனாவின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த இசைத் தொகுப்பை அவளுக்காக வாசிக்கிறான்.

ஆனாவின் பணியாள் ஒருநாள் பொறுப்பின்றியும் இரக்கமின்றியும் ஆனாவிடம் நடந்துகொள்ள, ஜார்ஜ் அவளை வேலையைவிட்டு நிறுத்தி விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனா பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்துவிட, ஜார்ஜ் தினமும் இரவில் பேச வைக்கும் தெரபி என்று தன்னுடன் சேர்ந்து அவளை ரைம்ஸ் பாட வைக்கிறார். 

ஓர் இரவு ஜார்ஜ் ஆனாவுக்கு உணவு ஊட்டிவிட, ஆனா சிறுபிள்ளை போல் சாப்பிட மறுத்து அடம்பிடிக்க ஜார்ஜ் தன்னை மறந்தவராய் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறார். பிறகு அதற்காக வருத்தப்பட்டு ஆனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

ஒருநாள் ஆனாவின் மகள் வீட்டிற்கு வரப் போவதாக கடிதம் வர.. ஆனா தன் மகள் அங்கு வருவதை விரும்பவில்லை என்கிறாள். அதையும் மீறி மகள் வந்துவிட, ஜார்ஜ் ஆனாவின் அறையைத் தாளிட்டு மகளிடம் ஆனா உன்னைக் காணத் தயாராயில்லை என்கிறார். ஆனால் மகளோ தன் அம்மாவைப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஜார்ஜ் கதவைத் திறந்துவிட கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆனாவை அவள் மகள் நெருங்கித் தொட முயல அப்போது விழித்துக்கொள்ளும் ஆனா பேச இயலாமல் கத்திக் கூப்பாடு போட்டு மகளைப் பார்க்க மறுத்து அங்கிருந்து அவளை வெளியேறச் சொல்கிறாள். ஜார்ஜ் தன் மகளிடம் " நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா; நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக்கறோம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அன்றிரவு ஜார்ஜ் பல் துலக்கிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் ஆனா நோயின் உச்சத்தில் வலி பொறுக்க மாட்டாதவளாய் வேதனையில் கத்துகிறாள். ஜார்ஜ் அவளுக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கிறார். வலி தெரியாமலிருக்க தன் சிறு வயதுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, முடிவில் ஜார்ஜ் அருகிலிருக்கும் தலையணையை எடுத்து ஆனாவின் முகத்தில் பொத்தி அழுத்தி ஆனாவுக்கு அவளுடைய நோயின் வேதனையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் நிரந்தர விடை கொடுத்து அனுப்பி வைக்கிறார். 

மறுநாள் ஜார்ஜ் கண்விழிக்க, ஆனாவின் குரல். சென்று பார்க்க ஆனா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள். ஜார்ஜ் அவளுக்கு கோட் அணிய உதவி செய்து அவளுடனே சேர்ந்து அவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். ஆனா மற்றும் ஜார்ஜாக நடித்த EMMANUEL RIVA , JEAN-LOUIS TRINTIGNANT இருவரின் நடிப்பு என்றும் மறக்க முடியாதது. ஜார்ஜாக நடித்த JEAN-LOUIS TRINTIGNANT பல முன்னணிப் படங்களில் நடித்தவர். COSTA GRAVAS என்னும் இயக்குனரின் ' Z ' படத்திற்காக கேன்ஸில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர்.

'அமோர்' தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதை என்கிற Haneke-விற்கு 'ஜார்ஜ்' மற்றும் 'ஆனா' என்கிற பெயர்களின் மீது ஏனோ அப்படி ஒரு காதல். தன்னுடைய எட்டுப் படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குமே அவர் ஜார்ஜ், ஆனா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

- நன்றி- சினிமா விகடன்