Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0