Saturday, March 09, 2013

The Attacks Of 26/11(2013) - மும்பை அட்டாக்ஸ் !!

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் The Attacks Of 26/11 (2013) படத்தின் ஏழு நிமிட முன்னோட்டம் வெளியான உடனே இந்த படத்தை எப்பாடுபட்டாவது தியேட்டரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன். படத்தை போன வாரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தை பற்றி எனது பார்வையை பதிவு செய்யலாம் என்கிற எண்ணத்தின் விளைவே இந்த பதிவு. ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி எனக்கு பிடித்த இந்திய இயக்குனர்களில் ஒருவர். இந்திய சினிமாவில் பல வித்தியாசமான முயற்சிகளை செய்தவர், செய்து கொண்டு இருப்பவர். எந்த இந்திய இயக்குனரும் ஆர்.ஜி.வி அளவுக்கு கதை சொல்லும் திறமை இருக்குமா என்பது சந்தேகமே. அவரின் சத்யா (1998), கம்பெனி (2002) சர்க்கார் (2005) போன்ற படங்கள் இவரின் கதை சொல்லும் திறமையை பறைசாற்ற போதுமானவை. மும்பை நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை இவர் அளவுக்கு யாருமே தந்துருப்பமாய் படம் பிடித்தது இல்லை.


சென்ற வருடம் மிக மிக கம்மியான செலவில் (ரூ. 6,50,000), வெறும் ஐந்தே நாட்களில் ஐந்து கேனான் 5 டி காமெராவை கொண்டு தெலுங்கின் முன்னணி நடிகர்களை வைத்து இவர் இயக்கிய  தொங்கலா முத்தா (Dongala Mutha -2011) இவரின் வித்தியாசமான சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. 100 நாட்கள், 200 நாட்கள் வருட கணக்கில் படம் எடுபவர்கள் மத்தியில் நல்ல திட்டமிடுதல் இருந்தால் வெறும் ஐந்தே நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து விடலாம் என்று இவர் நிருபித்து இருக்கிறார். வித்தியாசமான முயற்சிகள், நல்ல கதை சொல்லும் பாணி இருபதால் இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டுப்பர் ஹிட் ஆகும், எல்லா படத்தையும் பார்க்கலாம் என்று எண்ணி விட வேண்டாம். இவரை போல் மொக்கை படங்கள் குடுப்பதருக்கு இந்தியாவில் ஆர்.ஜி.வி விட்டால் ஆள் இல்லை. இவரின் சில படங்கள் வெறும் ரெண்டு நாட்கள் மட்டுமே ஓடி சாதனை புரிந்து உள்ளன. இந்திய சினிமா வரலாற்றின் மையில் கல் படமான "ஷோலே" படத்தை ரீமேக் செய்கிறேன் என்று "ராம் கோபால் வர்மா கி ஆக்" என்கிற பெயரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இவர் செய்த காமெடி கொத்து பரோட்டாவை  யாருமே மன்னிக்க மாட்டார்கள். அதே போல் அடிக்கடி பேய் படம் எடுக்கிறேன் என்று மக்களை பயம் முறுத்தி சிரிக்க வைப்பதும் இவரின் இன்னும் ஒரு பலவீனம்.


The Attacks Of 26/11 படத்தின் அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்து விட்டேன், இந்த படம் ஆர்.ஜி.வியின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும் என்று. எனது நம்பிக்கை வீண் போக வில்லை. 26/11 ஆர்.ஜி.வியின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்று. படத்தின் கதை இந்தியர் அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். 2008 வருடம் நவம்பர் 26 தேதி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் பற்றிய தொகுப்பே இப்படம். கிட்ட தட்ட டாகுமெண்டரி போன்ற ஒரு கதை களம். அதில் ஆர்.ஜி.வி தனது பாணியில் வழங்கி உள்ளார். படத்தை பார்க்கும் போது எனக்கு இது திரையில் ஓடும் படம் என்ற உணர்வே வரவில்லை, நானும் மும்பை நகரில் அந்த கோர இரவில் பயங்கரவாதிகள் மத்தியில் மாட்டி கொண்டு விட்டேன் என்றே உணர்வே தோன்றியது. படத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை  மும்பை ஜாயிண்ட் கமிஷனர் நானா படேக்கர் விவரிப்பது போன்று இருக்கும். நடந்த சம்பவங்களை அவர் விசாரணை கமிஷனிடம் விவரிப்பது போன்ற கதை அமைப்பு.

பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டுயிருக்கும் இந்திய மீனவர்களின் படகில் உதவி கேட்டு வருபவர்கள் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள். அந்த இந்திய படகின் முலம் மும்பை நகர்க்குள் புகும் தீவிரவாதிகள் இரண்டு குழுக்களாய் பிரிந்து சென்று கண்ணில் படுபவர்களை எல்லாம் வீடியோ கேம்மில் எதிரிகளை சுடுவது போல் சுட்டு விழுத்துகிறார்கள். முதலில் லியோபோல்ட் கஃபே என்கிற மக்கள் கூடும் இடத்தில தாக்குதல் தொடங்குகிறது, அதன் பிறகு தாஜ் ஹோட்டல் சென்று கண்ணில் படுபவர்களை எல்லாம் சுடுகிறார்கள். அந்த காட்சி படமாக்க பட்ட விதம் கல் நெஞ்சையும் கரைத்து விடும். சின்ன குழந்தையை கூட விட்டு வைக்காமல் சுட்டு விழுத்துவார்கள். அந்த காட்சி பார்க்கும் போது எனக்கு யாரவது நிஜ ஹீரோ வந்து பயங்கரவாதிகளை கொன்று மக்களை காப்பாற்ற மாட்டார்களா என்று தோன்றியது. ஆனால் இது கற்பனை கதை இல்லையே, ஹீரோ வந்து காப்பாற்ற. உண்மை கதையில் அப்படி எல்லாம் யாரும் வர மாட்டார்கள், நம்மை நாம் தான் காப்ற்றி கொள்ள வேண்டும் என்று எனக்கு உரைத்தது.


சி.எஸ்.டி ஸ்டேஷன் மற்றும் மாயா ஆஸ்பிட்டலில் ஷூட் அவுட் நடத்தியது கசாப் மற்றும் அவனது மற்றுமொரு ஜிகாதி கூட்டாளி. இவர்கள் எப்படி பட்ட சைக்கோ என்றல் ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அலறி ஓடும் நாயை கூட விட்டு வைக்காமல் சுட்டு விழுத்தும் ஜிகாதிகள். ஒரு குடிசை வீட்டில் நின்று குடிக்க தண்ணி கேட்பார்கள், தண்ணி வாங்கி குடித்தவுடன் அந்த விட்டில் உள்ள அப்பா, பையன் இருவரையும் சுட்டு கொல்லும் காட்சியை பார்த்த பிறகும் யாரவது காசப்க்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று போராடினால் அவர்களை மனிதர்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாய் சேர்க்க கூடாது.

அதன் பிறகு காசப் பிடிப்படும் காட்சி, மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் வெறும் லத்தியை மட்டும் வைத்து கொண்டு AK47 கொண்டு சுடும் கசாப் மீது பாய்ந்து அவனை அமுக்கும் காட்சி அருமையாக படமாக்க பட்டு இருக்கும். அதில் மும்பை போலீஸ்சின் தைரியத்தை காண முடிகிறது. எதிரியை விழ்த்த ஆயுதம் தேவை இல்ல, மன உறுதியும் மனவலிமை மட்டுமே போதும் என்பதை பறைசாற்றும் காட்சிகள் அவைகள்.

 கடைசி வரை அமைதியாக கதை சொல்லி கொண்டு இருந்த நானா படேக்கர் கசாப்ஸிடம் ஒரு காட்சியில் இஸ்லாம், ஜிஹாத் பற்றி கிளாஸ் எடுப்பார் பாருங்கள்!! மனிதர் நடித்த மாதிரி தெரியவில்லை. அந்த ஒரு காட்சியில் அணைத்து இந்திய ஆத்மாகளில் ஒளிந்து இருக்கும் தீவிரவாத வலியை மிக அற்புதமாய் பதிவு செய்து இருந்தது போல் எனக்கு தோன்றியது. கசாப்பாக நடித்திருக்கும் சஞ்சீவ் ஜஸ்வாலின் நடிப்பு அட்டகாசம். தான் செய்த காரியம் அல்லாவுக்கு ஆனது, அது தான் தன்னை சொர்கத்திற்கு அழைத்து போகும் வழி என்று புலம்பும் காட்சியில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தில் ஒரு வசனம் வரும், " காசப், ஒரு நாய், அந்த நாயை ஏவி விட்ட எஜமானரை நாம் தண்டிக்க வேண்டும் என்று, அதுக்காக நாயை விட்டு விட கூடாது". நாயை கொன்று விட்டோம், அதை ஏவிய பாகிஸ்தான் எஜமானரை எப்போது தண்டிக்க போகிறோமோ தெரியவில்லை.

The Attacks Of 26/11(2013)- தீவிரவாதத்தின் உண்மை முகம்.

My Rating: 7.9/10......