ONSITE அதாவது தற்காலிக குடிப்பெயர்ச்சி பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அது பத்தி தெரியாதவங்களுக்கு அத பத்தின விளக்கம் தான் இந்த பதிவு. தற்காலிக குடிப்பெயர்ச்சி அப்ப்டின்குற பேருல சுமார் 2~3 வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பார்வேர்ட் மெயில் வந்துச்சு. அதா முழுசா படிச்சு பார்த்தா கிட்ட தட்ட என்னோட முத ONSITE அனுபவத்தை அப்படியே என் கன்னுமுன்னடி கொண்டு வந்து நிறுத்துன மாதிரி ஒரு பீலிங். அந்த அனுபவத்தை உங்களுக்கும் குடுக்கணும் அப்படிங்கற நோக்கத்துல வந்தது தான் இந்த பதிவு. இது என்னோட சொந்த பதிவு கிடையாது. எனக்கு வந்த மெயில்ல கொஞ்சம் மாற்றங்கள் பண்ணி இங்க குடுத்து இருக்கேன். படிச்சிட்டு உங்க உங்களுக்கும் இதே போல ஏற்பட்டு இருந்தா அத சொல்லுங்க.
“Have you been to States before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite at-least once”
“yeah…I could have been… But…”
இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..
“அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..
“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
"சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…
ஆன்சைட் – மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.
சரி ஆன்சைட்னா என்னாங்க?
ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற Process தான் Onsite-Offshore co-ordination.
இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…
அப்படி போறதுனால என்னங்க…
நல்லா கேட்டிங்க….
** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!
** நம்ப Negotiation Skills ம், Business Communication ம் நல்லா இம்ப்ரூவ் ஆகும்!
** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய (கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.
** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்…
(அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.)
அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா பேஸ் புக்லயோ, ஆர்குட்லயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…
இங்க அவனவன் 42 Degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு Snow Fallல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.
மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு Resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…
மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் Resource அ வெச்சு கிட்டு ஜூனியர் Resource யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…
ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ” நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த “வருமோவராதோ” ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் பில்லா அஜித் மாதிரி “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்கு சியான் விக்ரம் மாதிரி “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..
ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா நேக்கா ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…
மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே Squad-ல ரெய்னாவுக்கு பதில பார்த்திவ் படேல எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் Work Permit எடுக்கணும் அப்பறம் Visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) UK னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ Consulate ல Submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி Computerized லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!
இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்” சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு மந்திரச்ச விட்ட கொரங்கு மாதிரியே திரியுவானுக!
நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…
இல்ல சினிமால சொல்றாப்ல “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.. இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்…அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்…அவங்களும் Monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த Monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்.
வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.
இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்…
திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.
ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.
நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்…கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்…அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு (“மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்.
ஆனாலும் அந்த நம்பிக்கையில மண்ணு எப்ப வேணும்னாலும் விழலாம். அது எந்த மாதிரி கலர் புல் மண்ணுன்னு அடுத்த பாகத்துல பார்போம்.
டிஸ்கி:
நான் மேல சொன்ன மாதிரி இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவை எழுதியவர் பாலா, அவர் அன்பே சிவம் அப்ப்டின்குற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். அவர் கிட்ட அனுமதி வாங்காம்ம இந்த பதிவை வெளியிட்டு விட்டேன், பதிவு வெளியிடும் போது அத எழுதுனவர் அவர் தான்னு தெரியாது. இப்ப அவர் கிட்ட அனுமதி கேட்டு இருக்கேன். அவர் அனுமதி குடுத்தா மீதி ரெண்டு பாகத்தை வெளி இடுவேன். இந்த மாதிரி ஆன் சைட் அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டு இருந்தா அவர் பதிவுல போய் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லுங்க.