Sunday, July 24, 2016

கபாலி (2016) - முழுமையான் படம்


25 வருடம் சிறைவாசம் முடித்து வரும் ஒரு கேங்க்ஸ்டர் தான் வாழ்வில் இழந்ததை திரும்பபெறும் போராட்டம்தான் கபாலி. இந்த நேரம் கபாலி படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதனால் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் இங்கு தொகுத்து உள்ளேன். படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 


Spoilers ahead:

"கபாலியில் நான் ரசித்த காட்சிகள்":


1) "மாய நதி" பாடலில், ஒரு வெளிநாட்டு ஜோடி பிரெஞ்சு கிஸ் அடித்து கொண்டுயிருக்கும் போது கபாலி, குமுதவல்லியை கண்ணில் காதல் ததும்ப பார்க்கும் காட்சி. ராதிகா ஆப்தே அதற்கு குடுக்கும் ரியாக்ஷன். மக்கள் தனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் சும்மா குடுக்கவில்லை என்பதை ரஜினி நிருபித்த காட்சி.

2) தாய்லாந்து நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, யோகி தான் தன் மகள் என்று புரிந்து கொண்டு, தன் மகள் யோகி தனது கையை பிடித்து வெளியே கூட்டி கொண்டு வரும் போது யோகியை பார்க்கும் பார்வை. செம. அந்த காட்சியில் ரஜினி வாழ்ந்திருப்பார்.

3) நல்ல ராவான கொரியன்/அமெரிக்கன்  கேங்க்ஸ்டர் படங்களை பார்க்கும் போது, எங்கே யாருக்கு எப்போது வெட்டு விழும் என்கிற ஒருவித பயம் நமக்கு வரும் பாருங்கள், அதே போன்ற பய அனுபவம் ரஜினி படத்தில் 3~ 4 காட்சிகளில் கிட்டியது மறக்க முடியா அனுபவம்.

4) பெட் ஷாப்பில் நடக்கும் சண்டைக்கு முன்பான பில்ட் அப் காட்சி.

5) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் தன் மகள் பிடிபட்ட பிறகு, அந்த இடத்தில ரஜினி சோபா மீது கால் மீது கால் போட்டு உட்காரும் காட்சி, எப்படி ஒருவன் தன் மகள் துப்பாக்கி முனையில் இருக்கும் போது கூட இப்படி திமிராக இருக்கிறானே என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு ரஜினி பேசும் வசங்கள் "கபாலியை" எனக்கு முழுமையாக உணர்த்தியை காட்சிகள். 

6) பண்ணை வீட்டில் குண்டடிபட்டு சோர்வாய் இருக்கும் போது, தன் மகள் முலம் தன் மனைவி எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்று அறிந்த பிறகு, சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழும் காட்சி செம. அந்த காட்சியை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாய் படம்மாக்கிய ரஞ்சித்க்கு ராயல் சல்யூட். நாயகன் படத்தில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை கமல் காட்டு எருமை பொறியில் மாட்டியது போல் அழுவார். அந்த காட்சியமைப்பை இன்று வரை பேச படுகிறது. சராசரி மனிதன் அது போல் செய்யமாட்டான். அது போக குண்டடிபட்டு ஓய்வில் இருக்கும் ஒருவன் அப்படி தான் அழுவான்.

7) செட்டியார் வீட்டில், சங்கிலி முருகன் அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்து "வள்ளியை" பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லி போன் அடிப்பார், அந்த பக்கம் ரிங் போய் கொண்டே இருக்கும். அவர்கள் போன் எடுக்கும் வரை ரஜினி முகத்தில் தெரியும் பதட்டம். யப்பா அந்த பதட்டம் எனக்கும் ஒட்டி கொண்டது. 

8) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள், டயலாக் டெலிவரி செம.

9) பிளாஷ்பேக்கில் ரஜினியின் எனெர்ஜி. சும்மா தீ மாதிரி நடித்து இருப்பார். நாசர் பேசும் வசனங்கள் எல்லாமே சிம்பிள் மற்றும் பவர்புல்.

10) பள்ளி பட்டமளிப்பு விழாவில் ரஜினி தன் கதையை மாணவர்களுக்கு சொல்லும் காட்சிகள், மெது மெதுவாய் நமது டெம்போவை ஏற்றி, கதை சொல்லி முடிக்கும்போது அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் எமொஷனை நமக்குள் புகுத்தி இருப்பார். அந்த காட்சி முடியும் போது என் நெஞ்சு கனத்து போனது. இது போன்ற அனுபவம் வேறு எந்த காட்சிக்கும் எனக்கு கிட்டியது இல்லை. இந்த ஒரு காட்சிக்கும் மட்டும் கபாலியை நான் கொண்டாடி மகிழ்வேன்.





படத்தில் நான் குறைகள் என்று கருதுவது: 

1) கடைசி கடைசி காட்சி, "டைகர்" ரஜினியை சுடும் காட்சி. அதை ரஞ்சித் தவிர்த்து இருக்கலாம். 

2) படத்தில் வரும் நிறைய கதாபாத்திரத்தின் பெயர் குழப்பங்கள். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் "யோகி" "ஜீவா" யார் என்றே புரிந்தது. 

3) யூகிக்க கூடிய காட்சியமைப்பை தான் படத்தின் மிக பெரிய பலவீனம். 

4) மலேசியா சொல்லாடல்கள் புரிந்துகொள்ள சற்று கடினமாய் இருந்தது. தேத்தண்ணி, கோழிக்கறி, சாவடி, பொன்னழகு போன்ற சொற்கள்.

5) டோனி லீயின் சாம்ராஜியத்தை ரஜினி கீழே கொண்டு வரும் காட்சிகள் சப்பையாய் முடிந்தது பெரிய ஏமாற்றம். 

கபாலி இத்தனை கோடி வசூல் செய்தது, அந்த சாதனையை முறியடித்து போன்ற விசயங்களை பற்றி நல்ல சினிமாவை நேசிப்பவன் கவலை பட மாட்டான். நல்ல சினிமாவை விரும்பியவர்களுக்கு நல்ல விருந்தை ரஞ்சித்தும் ரஜினியும் வழங்கி உள்ளார்கள். பிடித்தவர்கள் எடுத்து கொள்ளலாம், பிடிக்காதவர்கள் "2.0" க்கு காத்து இருக்கலாம்.

கபாலி  - முழுமையான் படம்

My Rating : 9.0



Wednesday, February 04, 2015

என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்

 தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால்.  அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.


 சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.



அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார்.

அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.



திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.

கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.



கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது.

என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்

My Rating : 8.5


Wednesday, November 05, 2014

The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்

விஞ்ஞானம் என்பதும், தொழில்நுட்பம் என்பது வேறு. விஞ்ஞானத்தையும் டெக்னால‌ஜி எனப்படும் தொழல்நுட்பத்தையும் பல நேரங்களில் நாம் குழப்பிக் கொள்வதுண்டு. விஞ்ஞானம் மனிதகுலத்துக்கு அவசியமானது. டெக்னால‌ஜி பொரும்பாலும் நம்மை நுகர்வுப் பொருளாக்குவதற்கு பயன்படுத்தப்படுவது. மனிதன் படிப்படியாக டெக்னால‌ஜியின் அடிமையாகி வருகிறான். இந்த அபாயத்துக்கு எதிராக இந்தியாவில் அழுத்தமாக குரல் கொடுத்தவர் காந்தி.

தாராளமயமாக்கலின் நுகர்வு உலகு இந்த உலகின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறது. அதாவது standardization செய்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் வாங்கும் ஒரு அங்குல நட்டும் போல்டும் (சில நாடுகள் தவிர்த்து) உலகம் முழுக்க ஒரே மாதி‌ரியாகதான் இருக்கும் அதனால் எங்கும் அதனை பொருத்த முடியும். பத்தாம் எண் காலணியின் அளவு உலகம் முழுக்க ஒன்றுதான். இப்படி standardization செய்யும் போது அதனை சந்தைப்படுத்துதல் எளிது. அமெரி்க்காவில் தயா‌ரிக்கிற ஒரு பொருளை தென்தமிழகத்தில் ஒரு குக்கிராமம்வரை கொண்டு வந்துவிட முடியும், விற்பனை செய்ய இயலும். 

நெல் அ‌ரிசி சோறு சாப்பிடுகிறவர்களை பீட்சா சாப்பிடுகிறவர்களாக மாற்றினால் இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ தமிழர்களுக்கான உணவுகளை தயா‌ரிக்க முடியும், தமிழகத்தில் சந்தைப்படுத்த இயலும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த standardization ஐ திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. அவர்களின் பர்கரையும், பீட்சாவையும், கென்டகி சிக்கனையும் - அவைதான் உயர்ந்தது, நாக‌ரிகமானது என்ற மோஸ்தரை உருவாக்குவதன் மூலம் நம்மிடையே சந்தைப்படுத்துகின்றன.


தி வோல்ட்ஸ் என்ட் திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுகிறது. இந்த இடத்தில் கலை என்றால் என்ன என்பது குறித்தும் பார்க்க வேண்டும். வாழ்வின் சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துவது கலையின் ஆதாரமான விஷயம். அது நுகர்வு கலாச்சாரத்தின் ஒழுங்கமைவுக்கு எதிரானது. ஏன் தினம் ஒரே மாதி‌ரியான வேலைகளை செய்ய வேண்டும்? ஒரே மாதி‌ரியான உடைகளை போட வேண்டும்? ஒரே மாதி‌ரியான பழக்க வழக்கங்களை மட்டும் கொண்டாட வேண்டும் என்று கேளிவிகளை எழுப்பக் கூடியது. தாரளமயமாக்கல் அனைத்தைம் சேர்த்துக் கட்டினால் கலை அதனை பி‌ரித்துப் போடுகிறது. தொழில்நுட்ப நெட்வொர்க் அனைத்தையும் standardization செய்கிறது. கலை ஒவ்வொன்றின் தனித்துவத்தை நிலைநிறுத்துகிறது.

தி வேர்ல்ட்ஸ் என்ட் திரைப்படத்தில் இருபது வருடங்களுக்குப் பிறகு சில நண்பர்கள் தங்களின் சொந்த நகரத்தில் ஒன்றிணைகிறார்கள். படிக்கிற காலத்தில் அவர்கள் மேற்கொண்ட pub crawl தோல்வியில் முடிந்திருக்கும். pub crawl என்றால் நகரத்தில் இருக்கும் அடுத்தடுத்த பஃப்களில் தொடர்ச்சியாக ஒரே இரவில் மது அருந்துவது. நண்பர்களின் கணக்கு 12 பஃப்கள். 12 வது வேர்ல்ட்ஸ் என்ட் எனப்படும் பஃப். ஆனால் அவர்களால் அந்த சுற்றை முடிக்க முடியாமல் போய்விடும். அதனை பூர்த்தி செய்யவே இந்த சந்திப்பு.


இந்த தொடர் குடியில் இந்த சந்திப்பை ஒழுங்கு செய்யும் கேரி கிங் நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் ரோபோக்கள் என்பதை கண்டு பிடிக்கிறான். மற்ற நண்பர்களும் அதனை அறிந்து கொள்கிறார்கள்.

அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபோக்களுடன் சண்டையிட்டு கேரி கிங்கும் நண்பர்களில் ஒருவரான ஆன்டியும் கடைசி பஃப்பான தி வேர்ல்ட்ஸ் என்ட்வரை வந்து விடுகிறார்கள். அங்குதான் இந்த குளறுபடிக்கான காரணத்தை - நாம் மேலே சொன்னதை - அவர்கள் நெட்வொர்க் என்ற குரலின் மூலம் கண்டு கொள்கிறார்கள். போதை அடிமையான கேரி நெட்வொர்க்கில் ஒன்றாக தங்களால் இணைய முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறான். நெட்வொர்க்கின் தோல்வியைத் தொடர்ந்து அந்தப் பகுதியே வெடித்து சிதறிவிடுகிறது.

இயக்குனர் எட்கர் Shaun of the Dead (2004), Hot Fuzz (2007) படங்களைப் பார்த்தவர்களுக்ககு இந்தப் படம் பெரிய ஆச்ச‌ரியமாக இராது. தி வேர்ல்ட்ஸ் என்ட் படம் த்‌ரி ஃப்ளேவர்ஸ் கார்னெட்டோ ட்ரையால‌ஜியின் (Three Flavours Cornetto trilogy) கடைசிப் படம். முதலிரு படங்கள்தான் Shaun of the Dead மற்றும் Hot Fuzz. 


இந்த ட்ரையால‌ஜியில் கார்னெட்டோ ஐஸ்க்‌ரிம் ஏதாவது காட்சியில் இடம்பெறும். முதல் படத்தில் ஸ்ட்ராபெர்‌ரி ஃப்ளேவர் கார்னெட்டோ. இரண்டாவதில் ப்ளூ ஒ‌ரி‌ஜினல் கார்னெட்டோ மூன்றாவதான தி வேர்ல்ட்ஸ் என்டில் பச்சை நிறத்தை குறிக்கும் மின்ட் சாக்லெட் சிப்.

இந்த மூன்று பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தவர்கள் சைமன் பெக்கும், நிக் ஃப்ரோஸ்டும். மூன்று ட்ரையால‌ஜியில் இரண்டாவது படமான ஹாட் ஃபஸ் திரைப்படமே சிறந்தது. போலீஸ் அதிகா‌ரியான சைமன் பெக் குற்றங்களே நடக்காத இங்கிலாந்தின் கிராமம் ஒன்றுக்கு மாற்றப்படுகிறார். சைமனின் கைது நடவடிக்கையும், குற்றச் செயல்களை கண்டு பிடிக்கும் திறனும் மற்ற போலீஸ் அதிகா‌ரிகளைவிட பல மடங்கு அதிகம். ஒருகட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாமல்தான் இந்த மாற்றமே.


குற்றமே நடக்காத கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் பலர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்ட கொலைகள். கொலை செய்கிறவர்களில் முக்கியமானவர்கள் அந்த கிராமத்திலுள்ள கிழங்கட்டைகள். யாராவது போட்டிருக்கும் உடை பிடிக்கவில்லை என்றாலும் கொலைதான். இந்த அபத்த நாடகத்தை சைமன் சக போலீஸ்காரர் நிக் ஃப்ரோஸ்டுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்.

எட்கர் ரைட் படங்களின் பிரதான அம்சம் ஷார்ப்பான எடிட்டிங் மற்றும் கதை சொல்லும்முறை. இந்த இரண்டும் மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதி‌ரியாக இருந்தாலும் ஹாட் ஃபஸ் பலவகைகளில் மற்ற படங்களை சிறந்தது.

மூன்று படங்களையும் pub crawl மாதி‌ரி ஒரே இரவில் தொடர்ந்து பார்த்தால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

நன்றி : வெப்துனியா


Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0


Thursday, August 28, 2014

The Call (2013) - சீரியல் சைக்கோ கில்லர்.


ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.

ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.

அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.   



அமெரிக்காவில் 911 என்ற தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911 எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம். எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம். நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும். பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.

911 சேவையில் பணியாற்றும் ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில் பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.

அடுத்து அதிரடியாக டேக்கன் நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில் படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள் கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட் வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன் ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக் கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன் மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற பன்ச் டயலாக்கை சொல்கிறான். It's already done.


 இது போன்ற சீரியல் கில்லர் ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான் என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதும்.  

கொலைக்கான காரணம் பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப் படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம் இருக்கிறது.

நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்... 

நான்கு நாட்கள் கழித்து கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில் என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே எல்லாம் செய்கிறது.  
 
 
இதற்குப் பிறகு கதையைச் சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும் போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. 

தொலைக்காட்சி தொடர்களாக எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர். பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.   

Netflix கில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, படத்தை பற்றி எழுதும் முன்பு, யாரவது எழுதி இருகிறார்களா என்று தேடும் போது வெப்துனியாவில் இந்த பதிவு கிட்டியது. அதை தன் இங்கு பகிர்ந்து உள்ளேன்.

நன்றி - வெப்துனியா